ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் ராமநாதபுரம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். வேட்பு மனு தாக்கலின் போது ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 4 பேரும், பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவரும் என 5 பேர் தங்களது வேட்பு மனுக்களை இந்த தொகுதியில் தாக்கல் செய்திருந்தனர்.
இதையடுத்து இன்று சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது 5 பன்னீர்செல்வங்களும் தங்களுக்கு வாளி சின்னத்தை ஒதுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார். அதற்கு மற்றொரு ஓ.பன்னீர்செல்வம், தனக்கும் பலாப்பழம் சின்னம் ஒதுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து குலுக்கல் முறையில் தேர்வு நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் வெற்றி பெற்றதால் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்தார். இரட்டை இலை சின்னத்திற்காக கடும் சட்டப்போராட்டங்களை நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம், கடைசியில் சுயேட்சை சின்னத்திற்கும் கடும் போராட்டத்தை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...