ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வெளியான வீடியோ, கடந்த ஜூலை மாதம் எடுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கோவை மட்டமின்றி தமிழ்நாடு முழுவதும் அவர் தற்போது தீவிர சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதனிடையே ஆரத்தி எடுக்கும் பெண் ஒருவருக்கு அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோ இணையதளத்தில் நேற்று வேகமாக பரவியது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமாரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதையடுத்து இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு காவல்துறைக்கு அவர் பரிந்துரைத்தார். இதன் பேரில் போலீஸார் நடத்திய ஆய்வில், அந்த வீடியோ எடுக்கப்பட்டது கடந்த ஜூலை மாதம் என்பது தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் ’என் மண், என் மக்கள்’ யாத்திரை மேற்கொண்ட அண்ணாமலை, அப்போது ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்ததாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் தேர்தல் விதிமீறல் அல்ல என தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் இதனை தவறான உள்நோக்கத்தோடு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை, காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் அதிர்ச்சி!