அனுமதியின்றி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்தியதாக தருமபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தருமபுரி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி ஆவார். இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் தருமபுரி கவனிக்கத்தக்க தொகுதியாக மாறியுள்ளது.
மேட்டூர் அருகே உள்ள மேச்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 27-ம் தேதி இவரை ஆதரித்து, அமமுக சார்பில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. இந்த வேட்பாளர் அறிமுக கூட்டம் நடத்துவது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெறவில்லை. இதுகுறித்த தகவலறிந்த பறக்கும் படை அதிகாரி அண்ணாதுரை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் போது, உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக மேச்சேரி காவல் நிலையத்தில் இன்று (29-ம் தேதி) புகார் அளித்தார்.
அதன்பேரில், பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி, பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், அமமுக மாவட்ட செயலாளர் எஸ்.கே.செல்வம் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல எடப்பாடி அடுத்த ஆவணி பேரூர் கீல்முகம் ஊராட்சி ஆலமரத்துகாட்டில் நேற்றிரவு பாஜக சார்பில் சேலம் மக்களவை தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. உரிய அனுமதி இல்லாமலேயே இந்த கூட்டமும் நடத்தப்பட்டது தெரியவந்தது. அதன்பேரில், போலீஸார் பாமக மற்றும் பாஜகவை சேர்ந்த 52 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தருமபுரி தொகுதியில் பாஜக - பாமக கூட்டணியில் சௌமியா போட்டியிடும் நிலையில், திமுக சார்பில் ஆ.மணியும், அதிமுக சார்பில் ஆர்.அசோகன் , நாம் தமிழர் கட்சியின் சார்பில் அபிநயா பொன்னிவளவன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.