மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக நடிகர்கள் பலரும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளதாக பட்டியல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துவிட்ட நிலையில் பிரச்சாரத்திற்கு இன்னும் 18 நாட்களே மிச்சம் உள்ளது. அதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் பரப்புரையை சுறுசுறுப்பாக தொடங்கி விட்டார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் 29 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 640 பேர் நட்சத்திர பேச்சாளர்களாக பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகை விந்தியா உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாகவும் ஏராளமான நடிகர்கள் பிரச்சாரம் செய்ய உள்ளனர். அந்தப் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பல்வேறு தொகுதிகளில் திமுக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். அதே போல முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளில் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய உள்ளார்.
நடிகர்கள் வாசு விக்ரம், போஸ் வெங்கட் உள்ளிட்டவர்களும் திமுக ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இது தவிர திமுகவில் ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ள நடிகர்கள் பலரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர். எழுத்தாளர் மதிமாறன், பேச்சாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களும் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் உள்ளனர்.