[X] Close

மதுரை போலீஸ் உளவாளி ஆந்திராவில் கொலை: எதிர் கோஷ்டியினர் கொலை செய்திருப்பது அம்பலம்


police-murder-in-andra

நீலமேக அமரன்

  • kamadenu
  • Posted: 15 Oct, 2018 10:58 am
  • அ+ அ-

மதுரை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு உளவாளியாகச் செயல்பட்டு வந்த ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ஆந்திராவில் கொலை செய்யப்பட்டார்.

ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூரைச் சேர்ந்தவர் நீலமேக அமரன்(35). இவர், சொந்தமாக கார் வைத்து டிராவல்ஸ் நடத்தி வந்தார். பொதுநலச் சேவையிலும் ஈடுபட்டு வந்தார். ஆந்திரா, கேரளாவில் இருந்து மதுரை மற்றும் ஒத்தக்கடை பகுதிக்கு கஞ்சா கடத்தி வருபவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து போலீஸாருக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கும் உளவாளியாக (இன்பார்மர்) செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவருக்கு மனைவி மகேஸ்வரி, 9 மற்றும் 7 வயதில் இரு மகள்கள் உள்ளனர். சென்னை செல்வதாக மனைவியிடம் 2 நாட்களுக்கு முன் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அவர் ஆந்திராவில் மேம்போடு பகுதியில் ஒரு கும்பலால் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரை வெட்டிய கும்பல், தமிழக பதிவெண் கொண்ட காரில் தப்பியதாக ஆந்திரா போலீஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு உளவாளியாக இருந்தாலும், அவர் ஆந்திராவுக்கு தனியாக எதற்குச் சென்றார். ஒருவேளை கஞ்சா கடத்தும் கும்பலை உளவு பார்க்கச் சென்றாரா என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில், அவரை ஆந்திராவில் அடையாளம் கண்ட எதிர் கோஷ்டியினர் கொலை செய்தி ருப்பது போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீஸார் கூறியதாவது:

நீலமேக அமரன் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உளவாளியாகச் செயல்பட்டது உண்மைதான். கஞ்சா கடத்தல் தொடர்பாக சென்னை, ஆந்திராவுக்குப் போலீஸார் செல்லும்போது, அமரனையும் உடன் அழைத்துச் செல்வர்.

இந்த முறை சென்னையில் இருந்து யாரோ அழைப்பதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்றுள்ளார். அவரது மனைவி தடுத்துள்ளார். ஆனால், அதையும் மீறி அவர் ஆந்திராவுக்கு எதற்காகச் சென்றார் எனத் தெரியவில்லை.

அங்கு சோதனைச் சாவடி ஒன்றில், இவரை பார்த்த ஒரு கும்பல் தகராறு செய்து இவரைக் கொலை செய்துள்ளது. கொலையாளிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். கொலையாளிகளை ஆந்திரா போலீஸார் பிடித்தால்தான், நீலமேக அமரனை கொலை செய்த காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close