அவர்களின் கைகளை வெட்டுங்கள்... தடாலடியாக பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு!


காங்கிரஸ் எம்எல்ஏ வீர்சிங் புரியா

ஜெய்ஸ் பழங்குடி மக்களின் வாக்குகளைப் பிரிப்பவர்களின் கைகளை வெட்டுங்கள் என்று பேசிய மத்தியப்பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ வீர்சிங் புரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ வீர்சிங் புரியா

மத்தியப் பிரதேச மாநிலம், ரட்லம்- ஜபுவா மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் காந்திலால் புரியா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அனிதா சவுகான் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் வேட்பாளர் காந்திலால் புரியாவை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜபுவா மாவட்டத்தில் உள்ள மத்ரானி என்ற இடத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ வீர்சிங் புரியா பேசினார்.

அப்போது அவர், " பிலாலா சமூகத்தினர் திருடர்கள், கொள்ளை அடிப்பவர்கள். ஜெய்ஸ் (ஜெய் ஆதிவாசி யுவ சக்தி சங்கதன்) வாக்குகளைப் பிரிப்பது பற்றி யாராவது பேசிவது தெரிந்தால்,அவர்களுடைய கைகளை வெட்டுங்கள்" என்று பேசினார். அவரது இந்த பேச்சு தொகுதி முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பிலாலா சமூகத்தைச் சேர்ந்த பாஜக வேட்பாளர் அனிதா சவுகானை குறிப்பிட்டு தான் காங்கிரஸ் எம்எல்ஏ இப்படி பேசினார் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் எம்எல்ஏ வீர்சிங் புரியா

இந்த நிலையில் அவர் மீது, மேக்நகர் தாசில்தார் பிஜேந்திர கட்டாரே அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 188 (அரசு ஊழியரால் முறையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவை மீறுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ஸ் என்பது பழங்குடி அமைப்பாகும். ரத்லாம் ஜாபுவா தொகுதி பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

x