பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி குர்பிரீத் கவுருக்கு இன்று பெண் குழந்தை பிறந்தது. இவர்களுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் மற்றும் அவரது மனைவி டாக்டர் குர்பிரீத் கவுருக்கு இன்று மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. இது பகவந்த் மானின் மூன்றாவது குழந்தையாகும். அவருக்கு முதல் திருமணத்தில் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தனக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பகவந்த் மான், “ கடவுள் ஒரு மகளைக் கொடுத்திருக்கிறார். தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
பகவந்த் மானின் மனைவியான குர்ப்ரீத் கவுர் புதன்கிழமை மொஹாலியில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து இன்று காலையில் மருத்துவமனைக்கு வந்த பகவந்த் மான் மதியம் 12.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
மார்ச் 16, 2022 அன்று பஞ்சாப் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்ற நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 6, 2022 அன்று சண்டிகரில் டாக்டர் குர்ப்ரீத் கவுரை அவர் திருமணம் செய்துகொண்டார். பகவந்த் மானுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். பகவந்த் மான் 2015 இல் தனது முதல் மனைவியான இந்தர்பிரீத்தை விவாகரத்து செய்தார். அவர்களுக்கு சீரத் (23) என்ற மகளும், தில்ஷன் (19) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் தற்போது அமெரிக்காவில் வசிக்கின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!