அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!


விஷ்ணுபிரசாத் வேட்புமனு தாக்கல்

தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அக்காவை தோற்கடித்து, கடலூர் தொகுதியில் போட்டியிடும் தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இருக்கிறார் என திருமாவளவன் பேசியிருக்கிறார்.

வேட்பாளர்கள் திருமாவளவன், விஷ்ணுபிரசாத்துடன் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவருக்கு தருமபுரி மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனை வெற்றி பெற வைக்க வேண்டிய பொறுப்பையும் இவருக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கிறார்.

கடலூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஷ்ணுபிரசாத் போட்டியிடுகிறார். அவர் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன். இவரது சகோதரிதான் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி. அவர் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராக பாஜக கூட்டணியில் போட்டியிடுகிறார்.

சௌமியா அன்புமணி

அங்கு அவரை எதிர்த்து திமுக வேட்பாளராக ஆ.மணி போட்டியிடுகிறார். அவருக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்கிற முறையில் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பணியாற்றி வெற்றி பெற வைக்க வேண்டிய பெரும் கட்டாயத்தில் இருக்கிறார். ஆக திமுக வேட்பாளரை வெற்றி பெற வைக்க சௌமியா அன்புமணியை தோற்கடிக்க வேண்டும். அதே நேரத்தில் கடலூரில் காங்கிரஸ் வேட்பாளரான சௌமியா அன்புமணியின் தம்பி விஷ்ணு பிரசாத்தை வெற்றி பெற வைக்கவும் வேண்டும். இதை வைத்து தான் திருமாவளவன் பேசியிருக்கிறார்.

நேற்று இரவு நடைபெற்ற சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “தருமபுரியில் அக்காவை தோற்கடித்து, கடலூரில் தம்பியை வெற்றி பெறவைக்க வேண்டிய நிலைமையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இருக்கிறார்” என்று திருமாவளவன் பேசியுள்ளது அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

x