கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது பாஜகவின் அரசியல் பழிவாங்கல் என கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா மற்றும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டது சமீபத்தில் தேசிய அளவில் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்த அதிரடியை தொடங்கியுள்ளது அமலாக்கத்துறை.
பினராயி விஜயனின் மகள் வீனா விஜயன் எக்ஸாலஜிக் (Exalogic) என்ற மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், கொச்சியை சேர்ந்த தனியார் சுரங்க தொழில் நிறுவனமான சிஎம்ஆர்எல், வீனா விஜயனின் மென்பொருள் நிறுவனத்திடம் எந்த விதமான சேவையையும் பெறாமல் ஏறத்தாழ 1 கோடியே 72 லட்ச ரூபாய் பணம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தீவிர மோசடிகள் குறித்த விசாரணை அலுவலகம் (SFIO) நடத்திய விசாரணைகளுக்கு எதிராக, எக்ஸாலஜிக் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த மாதம், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், "மத்திய அரசின் கைகளை கட்டிப்போட முடியாது" என்று கூறியது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை, வீணா விஜயன் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் கடந்த சில மாதங்ககளாகவே வேகமெடுத்த நிலையில், ஜனவரி மாதம் கேரள சட்டசபையில் இது குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், “எனது மனைவியின் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி எனது மகள் அந்த ஐடி நிறுவனத்தைத் தொடங்கினார். தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை”என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே கேரளாவில் கால்பதிக்க பல்வேறு நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது. இந்த தேர்தலிலும் ஆளும் சிபிஎம் கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பாஜக கடும் போட்டி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் வீணா விஜயன் மீதான அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் சிபிஎம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது.