[X] Close

விமானம் சுற்றுச்சுவரில் மோதியதற்கு ஓடுதளத்தின் நீளம் குறைவு காரணமா? - விரிவாக்கப் பணியை துரிதப்படுத்த அக்.27-ல் ஆலோசனைக் கூட்டம்


trichy-airport-issue

  • kamadenu
  • Posted: 13 Oct, 2018 11:02 am
  • அ+ அ-

திருச்சி விமானநிலைய சுற்றுச் சுவரில் நேற்று அதிகாலை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மோதியதற்கு ஓடுதளத்தின் நீளம் குறைவு என்பதும் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்று ப.குமார் எம்.பி தெரிவித்தார்.

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தற்போது 8,136 அடி நீளமுள்ள ஓடுதளம் (ரன்வே) மட்டுமே உள்ளது. எனவே, ஏர் பஸ் ஏ320, ஏர் பஸ் ஏ321, போயிங் 737 போன்ற ரக விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. பெரிய ரக மற்றும் சரக்கு விமானங்களை இயக்கும் வகையில், விமான ஓடுதளத்தை 12,500 அடியாக அதிகரிக்க இந்திய விமானநிலைய ஆணையக்குழுமம் திட்டமிட்டுள் ளது.

இதற்காக விமானநிலையத்தை ஒட்டிய 168.4 ஏக்கர் ராணுவ நிலம், 40.6 ஏக்கர் புறம்போக்கு மற்றும் விவசாய நிலங்கள் உட்பட 510 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் மூலம் கையகப்படுத்தும் பணிகள் விரைந்து முடிக்கப்படாததால், ஓடுதள விரிவாக்கத் திட்டம் நீண்டகாலமாக நிலுவையிலேயே உள்ளது.

இந்நிலையில், தற்போது ஏற்பட்ட விபத்துக்கு ஓடுதள பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும், ஓடுதளத்தின் குறிப்பிட்ட இடத்திலிருந்து விமானத்தை மேல்நோக்கி எழுப்பாமல், சில அடி தூரங்கள் தாண்டிச் சென்று பறக்க முயற்சித்ததால்தான் இந்த விபத்து நேர்ந்ததாகவும் கூறப்பட்டது.

விமானநிலையத்தை நேற்று பார்வையிட்ட விமானநிலைய மேம்பாட்டுக்குழுத் தலைவரும், எம்.பி.யுமான ப.குமாரிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், "போயிங் 737 ரக விமானங்கள் நீண்டகாலமாக இதே ஓடுதளத்தில் பறந்து சென்று கொண்டுள்ளன.

எனவே, ஓடுதளத்தின் நீளம் இதற்கு காரணமாக இருக்க வாய்ப்பில்லை. விபத்துக்கான காரணம் குறித்து டிஜிசிஏ விசாரித்து வருகிறது. எனினும் ஓடுதள விரிவாக்கப் பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 27-ம் தேதி விமானநிலையத்தில் நடத்தப்படும்’’ என்றார்.

விமானத்தில் வந்தவரின் மனைவி காயம்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் வி.எஸ்.என்.நகரைச் சேர்ந்தவர் ராஜா செல்வராஜ். துபாயில் வேலை பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சிக்கு வந்தார். அவரை அவரது மனைவி மணிமாலா (40) உள்ளிட்டோர் வரவேற்று காரில் அழைத்துக் கொண்டு, மீண்டும் ஊருக்குப் புறப்பட்டனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான அன்பழகன் காரை ஓட்டினார்.

கார், விமானநிலையத்தை விட்டு வெளியே வந்து, புதுக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ராஜா செல்வராஜ் வந்த அதே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுற்றுச்சுவர் மீது உரசிவிட்டு, காருக்கு மிக அருகில் பறந்து சென்றது. அப்போது சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து அவர் சென்ற காரில் விழுந்து கண்ணாடி உடைந்தது. இதில், உள்ளே அமர்ந்திருந்த மணிமாலாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 8 தையல் போடப்பட்ட நிலையில் அவர் புறநோயாளியாக வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதுகுறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close