தேனி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெற வைக்காவிட்டால் அடுத்த நாளே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் மூர்த்தி ஆவேச சபதம் செய்துள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களமிறங்கி உள்ளார். அவருக்கு எதிராக பாஜக கூட்டணி சார்பில் டி.டி.வி. தினகரன், அதிமுக சார்பில் நாராயணசாமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் தேனி தொகுதி இப்போதே தகிக்கத் தொடங்கியுள்ளது.
டி.டி.வி. தினகரனும், தங்க தமிழ்ச்செல்வனும் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் ஒன்றாக இருந்தவர்கள்.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் டி.டி.வி. தினகரன் அமமகவை தொடங்கியபோதும் அவருக்கு வலதுகரமாக தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார். பின்னர் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். தற்போது குரு தினகரனும், சிஷ்யர் தங்க தமிழ்ச்செல்வனும் நேருக்கு நேர் மோதுவதால் இந்த தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தொகுதியில் டி.டி.வி. தினகரன் தனது பிரசாரத்தை விறுவிறுப்பாக தொடங்கிவிட்ட நிலையில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து பல்வேறு பகுதிகளிலும் திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் அங்கு இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் படு உற்சாகத்தோடு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய முடியாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்வேன் என அமைச்சர் பி.மூர்த்தி ஆவேசமாக பேசியுள்ளார்.மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் பி.முர்த்தி, "தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக கழக தொண்டர்கள் அயராது பாடுபட்டு அவர் வெற்றிவாகை சூட வேண்டும். தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற முடியாவிட்டால் மறுநாளே நான் எனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்.
திமுக வேட்பாளரின் வெற்றிக்காக உண்மையாக உழைக்க வேண்டும், கட்சிக்கு சிலர் துரோகம் செய்து வருகின்றனர். சொந்தக் கட்சிக்கு துரோகம் செய்யாமல் உண்மையாக வேட்பாளர்களுக்கு உழைத்து வெற்றிக்கு பாடுபட வேண்டும்" என அவர் பேசினார். அமைச்சரின் இந்த சபதம் திமுகவினரை உசுப்பேற்றியுள்ளது. அதனால் டி.டி.வி.தினகரனை எதிர்த்து அவர்கள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.