புதுச்சேரியில் 10 ரூபாய் நாணயங்களை கடைகளில் வாங்குவதில்லை என்பதால், 12,500 ரூபாய் டெபாசிட் தொகையை கட்டி மக்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வித்தியாசமான முறையில் மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் 19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 27ம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இதனிடையே அரசியல் கட்சியினர் ஏராளமான தொண்டர் படையுடன் வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் வித்தியாசமான முறையில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து கவனம் ஈர்த்து வருகின்றனர்.
அந்த வகையில் புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் பத்து ரூபாய் நாணயங்களை சேகரித்து வந்து டெபாசிட் தொகையை கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் என்பவர் கடந்த 2014 ம் ஆண்டு முதல் மக்களவை மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்களில் சுயேட்சையாக போட்டியிட்டு வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசு சார்பில் 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும் பல இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க கடைக்காரர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பல தரப்பிலும் புகார் அளித்தும் உரிய நடவடிக்கைகள் இல்லை என்பது பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது.
அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக 10 ரூபாய் நாணயங்களை ராமதாஸ் சேகரித்து வைத்திருந்தார். இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது, 12,500 ரூபாய் டெபாசிட் தொகைக்கு, 10 ரூபாய் நாணயங்களை எடுத்து வந்தார். 1,250 பத்து ரூபாய் நாணயங்களை எடுத்து வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான குலோத்துங்கனிடம் அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த சில்லறை காசுகளை, அதிகாரிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எண்ணி, சரி பார்த்து ஏற்றுக் கொண்டனர்.
இதையும் வாசிக்கலாமே...
#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!