தமிழ்நாட்டில் புதிதாக மேலும் 20 சுங்கச்சாவடிகள்? - அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்!


சுங்கச்சாவடி

தமிழ்நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேலும் 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 1,228 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளிடமிருந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 381 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலைகள் உள்ளது. இதில் மாநிலம் முழுவதும் 48 சுங்கச்சாவடிகள் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

சுங்கச்சாவடி

இந்த 48 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் கோரிக்கையாக இருந்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானில் 70-க்கும் அதிகமான சுங்கச்சாவடிகள் உள்ளன. இரண்டாவது இடத்தில் உத்தரபிரதேசமும், மூன்றாவது இடத்தில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகியவை அதிக சுங்கச்சாவடிகள் கொண்ட மாநிலங்களாக இருந்து வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் புதிதாக 20 புதிய சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுங்கச்சாவடி

பெங்களூரு-சென்னை விரைவு சாலையில் 6, விழுப்புரம்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் 3, விக்கிரவாண்டி-நாகை நெடுஞ்சாலையில் 3, ஓசூர்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் 3, சித்தூர்-தச்சூர் விரைவு சாலையில் 3, மகாபலிபுரம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் 2 என மொத்தம் 20 சுங்கச்சாவடிகள் அமைக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை 16 ஆக குறைக்க வேண்டும் என மாநில அரசு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதாக 20 சுங்கச்சாவடிகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது, வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

x