தெலங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ், எர்ரவல்லியில் உள்ள தனது பண்ணை வீட்டில் நேற்று இரவு தவறிவிழுந்து காயமடைந்ததால்,ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் சமீபத்தில் முடிவடைந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி கட்சி வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் ஹாட்ரிக் கனவுக்கு காங்கிரஸ் முட்டுக்கட்டை போட்டது.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தெலங்கானாவின் சித்தாபேட்டை மாவட்டத்தில் உள்ள எர்ரவல்லி கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் தவறி விழுந்ததில் சந்திரசேகர் ராவுக்கு இடுப்பு பகுதியில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக ஹைதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சந்திரசேகர் ராவை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இடுப்பு பகுதியில் லேசான முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கூறியதாகவும் தெரிகிறது.
சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது கட்சி தொண்டர்கள் அங்கு குவிந்து வருகின்றனர்.