கோவையில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக 50-க்கும் மேற்பட்ட கார்களில் வந்த நாம் தமிழர் கட்சியினரை, போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டு போக்குவரத்து நெரிசலும் உருவானது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. வருகிற 27ம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய கடைசி தேதி ஆகும். 28ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறுகிறது. மார்ச் 30ம் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற இறுதி நாளாகும்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதில் ஆர்வம் காட்டி வந்தனர். இன்று பங்குனி உத்திரம் என்பதால் ஏராளமான வேட்பாளர்கள், இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அதிமுக சார்பில் போட்டியிடும் 33 வேட்பாளர்களும் இன்று ஒரே நாளில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர். இதே போல் பல்வேறு தொகுதிகளில் போட்டியிடும் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
கோவை மக்களவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார். கோவை காளப்பட்டி பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட கார்களில், நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்பினர். அவர்களை நேரு நகர் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீஸார், 50க்கும் மேற்பட்ட கார்கள் செல்வதற்கு அனுமதி இல்லை எனக் கூறினர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீஸார் நாம் தமிழர் கட்சியினரின் வாகனங்களை தடுத்து நிறுத்தியதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஐந்து, ஐந்து வாகனங்களாக அனுப்பி வைக்க போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இன்றும், நாளையும் மின்சார ரயில்கள் கும்மிடிப்பூண்டிக்கு செல்லாது!
லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!
பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!
யாருக்கென்று வாக்கு கேட்பார் ஸ்டாலின்? வேட்பாளர் அறிவிக்காத நிலையில் நெல்லையில் பிரச்சாரம்!
'சிவசக்தி'க்கு சர்வதேச விண்வெளி யூனியன் அங்கீகாரம்... நிலவின் அந்த பகுதிக்கு இனி இதுதான் பெயர்!