கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து அந்த மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் களம் இறக்கப்பட்டுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் 5-வது கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. அதில் 111 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சில முக்கிய பிரமுகர்களும் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக கங்கனா ரணாவத் உட்பட பல முக்கிய பிரமுகர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதில் ஒருவராக கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனின் பெயரும் உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் பாஜக வேட்பாளராக கே. சுரேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். கேரள மாநில பாஜக கட்சியின் தலைவராக இருக்கும் கே சுரேந்திரன் (54) காசர் கோடு பகுதியை சேர்ந்தவர். பட்டதாரியான இவர் கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஆர்.எஸ் எஸ் அமைப்பின் மாணவ அமைப்பான ஏபிவிபியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
அதன்பிறகு பாஜகவில் இணைந்த சுரேந்திரன் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி கேரள அரசியலில் கவனம் பெறத் தொடங்கினார். படிப்படியாக பாஜகவில் வளர்ச்சியடைந்த அவர் கடந்த 2020 ம் ஆண்டு கேரள மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் தான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே தற்போது ராகுல் காந்திக்கு எதிராக வயநாடு தொகுதியில் சுரேந்திரன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அமேதி தொகுதியில் ஸ்மிருதி ராணியை நிறுத்தி ராகுல் காந்தியை வீழ்த்தியதுபோல தற்போது கேரள மாநில பாஜக தலைவரையே ராகுலுக்கு எதிராக நிறுத்தியிருக்கிறது. இதன் மூலம் அவருக்கு கடும் போட்டியை பாஜக ஏற்படுத்தி உள்ளது. இவரைத் தவிர அம்மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மூத்த தலைவர் டி ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் அங்கு போட்டியிடுகிறார். இதனால் வயநாடு தொகுதி மும்முனைப் போட்டியின் மூலம் தேசிய அளவில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற மற்றும் பரபரப்பான தொகுதியாக மாறியுள்ளது.