[X] Close

தீபாவளிக்கு அரசு சிறப்புப் பேருந்துகள்; நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு


diwali-spl-bus

  • வி.ராம்ஜி
  • Posted: 11 Oct, 2018 19:22 pm
  • அ+ அ-

தீபாவளிக்கு 11,367 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னைக்கு வருவதற்கு தமிழகம் முழுவதும் இருந்து 9,200 பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான முன்பதிவு நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

வருகிற நவம்பர் 6ம் தேதி தீபாவளிப் பண்டிகை. இதையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்ததாவது:

நவம்பர் 1ம் தேதி முதல் தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கும். தீபாவளிக்கு மொத்தம் 20,567 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து நவம்பர் 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சுமார் 11,367 பேருந்துகள் இயக்கப்படும். மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

அதேபோல, தீபாவளிப் பண்டிகை முடிந்து சென்னைக்கும் மற்ற ஊர்களுக்கும் 11,842 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள் அனைத்தும் நவம்பர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடைபெறும்.

இதற்காக, கோயம்பேடு பணிமனையில் 26 கவுண்ட்டர்கள், தாம்பரம் மெப்ஸ் பணிமனையில் 2 கவுண்ட்டர்கள், பூந்தமல்லி, மாதவரம் பணிமனைகளில் ஒரு கவுண்டர்கள் என மொத்தம் 30 கவுண்ட்டர்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

அதேபோல், கோயம்பேடு மற்றும் தாம்பரம் மெப்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்க வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து கிருஷ்ணகிரி முதலான மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படும். கேகேநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இசிஆர் வழியே செல்லும் கடலூர், புதுச்சேரி, சிதம்பரம் முதலான ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியே செல்லும் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தாம்பரம் ரயில்வே ஸ்டேஷன் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பேருந்துகளும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம், செய்யார், ஆரணி, வேலூர், ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் முதலான ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மேலும் பல ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close