[X] Close

வீட்டில் அனைவரும் தாய் மொழியில் பேசுங்கள்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை


venkaya-naidu-speech

காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பட்டம் வழங்கினார் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு. அருகில், அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைவேந்தர் சு.நடராஜன் | படம்: ஜி.கார்த்திகேயன்

  • kamadenu
  • Posted: 11 Oct, 2018 08:47 am
  • அ+ அ-

வீட்டில் தாய்மொழியில் பேசுங்கள், ஆங்கிலம் பெரிது என்ற மோகத்தை தவிருங்கள் என மாணவர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு அறிவுரை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் 34-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை வகித்தார். துணைவேந்தர் சு.நடராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது:

இந்தியாவில் நகர்ப்புறத் துக்கும், கிராமப்புறத்துக்கும் அதிக இடைவெளி உள்ளது.

நீங்கள் வெளிநாடு சென்று படித்தாலும், மீண்டும் திரும்பி வந்து நமது நாட்டுக்கு சேவை செய்யுங்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் பணிபுரியுங்கள்.

தாய், தந்தை, சொந்த ஊர், மொழி ஆகியவை முக்கியமானது. தமிழ் தெரிந்தவர்கள் வீடுகளில் தமிழில் பேசுங்கள். அவரவர் தாய்மொழியை வீடுகளில் பேச வேண்டும். தாய்மொழி கண் போன்றது. மற்ற மொழிகள் கண்ணில் அணியும் கண்ணாடி போன்றது. எதிர்காலத்தில் அனைத்து வகை கல்வியையும் தாய்மொழியில்தான் படிக்க வேண்டும். கூடுதலாக இந்தி, ஆங்கிலம் படியுங்கள். ஆனால், ஆங்கிலம் மட்டுமே பெரிது என நினைத்துவிடாதீர்கள்.

அம்மாவை அம்மா என்று அழையுங்கள். நான் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசனின் ‘அம்மா’வை (முன்னாள் முதல்வர் ஜெயலலிதா) சொல்லவில்லை. நான் சொல்வது உங்கள் அம்மாவை. அவரவர்களின் அம்மாவை. இது எனது அறிவுரை என்றார்.

முன்னதாக ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராமம் வந்த எம்.வெங்கய்ய நாயுடுவை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆட்சியர் டி.ஜி.வினய் ஆகியோர் வரவேற்றனர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close