சொன்னா நம்புங்க...! - இவை அங்கன்வாடி மையங்கள் தான்... அடிப்படை வசதியில்லாமல் குழந்தைகள் அவதி


கொத்தக்கோட்டை ஊராட்சி பிரகதாம்பாள்புரத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கொத்தக்கோட்டை ஊராட்சியில், 2 அங்கன்வாடி மையங்கள் அடுப்படியாக பயன்படுத்தப்பட்டு வந்த கொட்டகையிலும், ஓட்டு வீட்டிலும் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இயங்கி வருகின்றன. இவற்றுக்கு புதிய கட்டிடம் கட்டித்தர பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த பிரகதாம்பாள்புரம் அங்கன்வாடி கட்டிடத்தின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து கொட்டியதால், அருகேயுள்ள ஒரு வீட்டின் அடுப்படியாக இருந்த கொட்டகைக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு, எவ்வித அடிப்படை வசதியும் இல்லை. இதன் காரணமாக வெயிலில் சிறார்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதேபோல, வடக்கு தோப்புப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியின் கட்டிடமும் சேதடைந்ததால், அருகேயுள்ள ஓட்டு வீட்டுக்கு மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கும் போதிய அடிப்படை வசதிகள் இல்லை.

இதுகுறித்து கொத்தக்கோட்டை அங்கன்வாடியில் பயிலும் சிறார்களின் பெற்றோர் கூறியது: கொத்தக்கோட்டை ஊராட்சியில் 25 ஆண்டுகளுக்கு முன்பே பிரகதாம்பாள்புரம் மற்றும் வடக்கு தோப்புப்பட்டி ஆகிய இடங்களில் கான்கிரீட் கட்டிடங்களில் அங்கன்வாடி செயல்பட்டு வந்தது. பின்னர், அங்கன்வாடி மைய கட்டிடங்கள் சேதமடைந்ததால், தற்போது வாடகைக் கட்டிடங்களில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

வடக்கு தோப்புப்பட்டியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம்.

பிரகதாம்பாள்புரம் அங்கன்வாடி, அடுப்படியாக பயன்படுத்தப்பட்டு வந்த, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டாலான கொட்டகையிலும், வடக்கு தோப்புப்பட்டி அங்கன்வாடி, தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட முன்பகுதியுடன் ஓடுகளால் வேயப்பட்ட வீட்டிலும் செயல்பட்டு வருகின்றன. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால், வெயில், மழைக் காலங்களில் சிறார்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, 2 அங்கன்வாடிகளுக்கும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

இதுகுறித்து கொத்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மாரிக்கண்ணு மயிலன் கூறியது: 2 அங்கன்வாடிகளுக்கும் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பலமுறை புகைப்படங்களுடன் திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்திலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திலும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற கூட்ட தீர்மானத்திலும் முன்மொழியப்பட்டது. புதிய கட்டிடங்கள் கட்ட தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் இதுவரை கட்டப்படவில்லை என்றார்.

x