திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வனவிலங்குகளால் தாக்கப்படும் விவசாயிகள் சிகிச்சை பெறுவதற்கு தனியாக மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் பேசும்போது, ''மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்த திடீர் மழையால் மானூர் வட்டாரம் பள்ளமடை கிராமத்தில் 21.94 ஹெக்டேர் பரப்பில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளது. இது தொடர்பாக வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் கூட்டாய்வு மேற்கொண்டு உத்தேச பாதிப்பு அறிக்கையை சென்னை வேளாண்மை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கார் பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக 29 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது வரை 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, 242 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து விவசாயிகளின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் பேசிய விவசாய பிரதிநிதிகள் பலரும் வனவிலங்குகளால் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். ''மேற்கு தொடர்ச்சி மலையடிவார குடியிருப்புப் பகுதிகளுக்குள் கரடி புகுந்துள்ளது. மந்திகள் ஊருக்குள் புகுந்து வீடுகளின் மேல் குதிப்பதால் ஓடுகள் சேதமடைந்து வருகின்றன'' என்று விவசாயி சொரிமுத்து புகார் தெரிவித்தார்.
காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் தாக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டி பேசிய பி. பெரும்படையார், ''வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும். இது குறித்து சட்டப் பேரவையில் பேசப்பட்டது. ஆனால் அரசு எவ்வித முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை. காட்டுப்பன்றி தாக்கி விவசாயிகள் பலரும் காயமடைந்து வருகிறார்கள். இவ்வாறு காட்டு விலங்குகள் தாக்கிய விவசாயிகள் சிகிச்சை பெறுவதற்கு தனியாக மருத்துவமனையை அமைக்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.
அவரது கருத்தை அங்கிருந்த அனைத்து விவசாயிகளும் ஆமோதித்து கரவொலி எழுப்பினர். ''மானூர் வட்டாரத்தில் குரங்குகள் அட்டகாசம் நீடிக்கிறது. தென்னை மரங்களில் ஏறி காய்களை பறிக்கிறது'' என்று அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.
அதற்கு, ''காட்டு விலங்குகள் தாக்குதல் குறித்து காவல் நிலையத்தில் விவசாயிகள் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் செய்து முதல் தகவல் அறிக்கையை பெறும்பட்சத்தில் மேற்கொண்டு சிகிச்சை மற்றும் நிவாரணம் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும்'' என்று ஆட்சியர் பதில் அளித்தார்.
''வெளிச்சந்தையில் தென்னங்கன்று ஒன்று ரூ.30-க்கு விற்பனை செய்யும் நிலையில், தோட்டக்கலைத்துறை ரூ.65-க்கு விற்பனை செய்கிறது. இந்த விலையில் தென்னங்கன்றுகளை வாங்க விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகிறது'' என ஆபிரகாம் குற்றஞ்சாட்டினார். ''அவ்வாறு யாரையும் கட்டாயப்படுத்த கூடாது'' என்று அதிகாரிகளை ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் அக்டோபர் மாதத்தில் மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலும் விவசாயிகளும் தகுந்த முன்னேற்போடு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் பேசிய ஆட்சியர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் முக்கிய பாசன கால்வாய்களான கோடகன் கால்வாய், பாளையம் கால்வாய் உள்ளிட்டவற்றில் அமலை செடிகள் அதிகமாக தொடர்ந்து உள்ளதாகவும் அதனை அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதற்கு ஆட்சியர் பதில் அளிக்கும்போது, ''பாசனக் கால்வாய்களில் அமலை செடிகளை அகற்றும் பொழுது முற்றிலுமாக அகற்றிய அமலை செடிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். அதனை கால்வாயில் கரை ஓரங்களில் வைக்கக் கூடாது'' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருநெல்வேலி ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதற்கான அரசாணைக்காக காத்திருப்பதாகவும் விவசாய பிரதிநிதி ரெஜினி எழுப்பிய கேள்விக்கு ஆட்சியர் பதில் அளித்தார்.