சென்னை: தமிழகம் முழுவதும் சிறைகளில் உள்ள கைதிகள், ஒருவித அச்சம்காரணமாகவே தங்களது குறைகளை வெளியே கூறுவதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
புழல் மத்திய சிறையில் கைதிகளுக்காக செயல்பட்டு வந்த கேண்டீன் கடந்த மார்ச் மாதம் திடீரென மூடப்பட்டுள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புழல் சிறையில் உள்ளகேண்டீனை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த விசாரணை கைதியான பக்ரூதின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது புழல் சிறையில் உள்ள கேண்டீன் திறக்கப்பட்டுள்ளதா அல்லது மூடப்பட்டுள்ளதா? என்பது குறித்து அம்பத்தூர் குற்றவியல் நடுவர் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, புழல்சிறையில் கேண்டீன் திறந்திருப்பதாக அம்பத்தூர் குற்றவியல் நடுவர் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
திடீர் ஆய்வுக்கு கோரிக்கை: அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.நதியா, ‘‘சிறையில் உள்ள கேண்டீனை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதும் வெளியில் இருந்துவாங்கி வரப்பட்ட தின்பண்டங்களைக் கொண்டு கேண்டீன் வழக்கம்போல இயங்கி வருவது போன்ற தோற்றத்தை சிறை நிர்வாகம் உருவாக்கியுள்ளது. திடீர் ஆய்வுக்கு உத்தரவிட்டால் மட்டுமே அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை வெளியே வரும்’’ என்றார்.
அதற்கு அரசு தரப்பில், ‘‘புழல்சிறையில் கேண்டீன் இயங்கவில்லை என ஒரே ஒரு கைதி மட்டுமே புகார் அளித்துள்ளார். சிறைத்துறை விதிகளின்படி சிறை நிர்வாகம் செயல்பட்டு வருகிறது’’ என பதிலளிக்கப்பட்டது.
பிரமாணப் பத்திரம்: அதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழகம் முழுவதும் சிறைகளில்உள்ள கைதிகள் ஒருவித அச்சம்காரணமாகவே தங்களது குறைகளை வெளியே கூறுவதில்லை. தமிழகத்தில் உள்ள சிறைச்சாலைகள் சிறை விதிகளின்படிதான் செயல்படுகி்ன்றன என சிறைத்துறை அதிகாரிகள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய முடியுமா?’’ என கேள்வி எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, ‘‘புழல் சிறையில் உள்ள கேண்டீன் சிறை விதிகளின்படி பராமரிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திலும் தொடர்ந்து இதேபோல பராமரிக்கப்படும் என சிறைத்துறை டிஐஜிபிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒருவார காலத்துக்கு தள்ளிவைத்தனர்