சேது எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்து கழன்ற 3 பெட்டிகள்: திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு


திருச்சி: ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து மூன்று பெட்டிகள் தனியாக கழன்று நின்றதால் திருச்சி ஜன்ஷன் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அந்த ரயில் தினமும் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு நள்ளிரவு 1:30 மணி அளவில் வந்து செல்லும். இந்நிலையில் சேது எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தனியாக கழன்றுள்ளது. இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரயில்வே துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே துறை பொறியாளர்கள், ஊழியர்கள் கழன்ற பெட்டிகளை உடனடியாக சரி செய்து இணைத்தனர். அதனைத் தொடர்ந்து அந்த ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்னை சென்றது. இதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து ரயில்வே துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து காரைக்கால் சென்ற ரயில், திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ரயில் நிலையம் அருகே சென்றபோது அந்த ரெயில் என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ரயிலில் பயணித்த பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டு மாற்று ரயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிலையில் சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில் பெட்டிகள் கழன்ற சம்பவம் ரயில் பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

x