[X] Close

புதுவையில் மழையால் கடும் பாதிப்பு: முதல் நாளிலேயே குடியிருப்புகளில் புகுந்தது வெள்ள நீர்


pudhucherry-rain-issue

புதுச்சேரி ரெயின்போ நகரில் தெருவில் தேங்கி நிற்கும் மழை நீர்.

  • kamadenu
  • Posted: 05 Oct, 2018 16:54 pm
  • அ+ அ-

புதுச்சேரியில் தொடர் கனமழை பொழிவு ஏற்பட்ட முதல் நாளிலேயே பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து சில இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை மற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நேற்று அதிகாலை தொடங்கிய கனமழை நாள் முழுவதும் நீடித்தது.

புதுச்சேரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அரியாங் குப்பம், வில்லியனூர், மங்கலம், கிருமாம்பாக்கம், மடுகரை, பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. பாவாணன்நகர் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது.

இந்திராகாந்தி சிலை அருகே இருந்த பெரியமரம் வேரோடு சாய்ந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் மிஷன்வீதியிலும் மரம் விழுந்ததால் அங்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மரங்களை அப்புறப்படுததும் பணியில் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீஸார் ஈடுபட்டனர். பலத்த மழையால் ஒருசில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

நகர பகுதியில் உள்ள நேருநகர் குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்து இருப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்தப் பகுதியில் நிறுத்தப் பட்டிருந்த வாகனங்கள் நீரில் மூழ்கின. மேலும் அப்பகுதியில் சில வீட்டிற்குள் தண்ணீர் வந்ததால், அதை வெளியேற்றும் பணியில் குடியிருப்புவாசிகள் ஈடுபட்டனர்.

மழை நீருடன் கழிவுநீர் கலந்து வருவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் அதற்குள் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் தெரிவிக் கின்றனர்.

இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை புதுச்சேரியில் கனமழை முன்னறிவிப்பு உள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 63 மிமீ மழை பொழிவு பதிவாகியுள்ளது.

மோட்டார் மூலம் வெளியேற்றம்

இதனிடையே மழை நீர் அதிகம் சூழ்ந்துள்ள நகரின் மையப் பகுதிகளான ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், ஜீவா நகர், பூமியான்பேட்டை, பாவாணன் நகர் மற்றும் உப்பனாறு வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சௌத்ரி மற்றும் உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தேங்கியுள்ள மழை நீரை மின்மோட்டார் மூலம் உடனடியாக வெளியேற்றுமாறு நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும் கனமழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்கு நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளில் மழையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 1070, 1077 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தாமதமான அறிவிப்பால் தவித்த மாணவர்கள்

புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதலே கனமழை பெய்தது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. காலை 8 மணி வரை விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

கனமழைக்கு நடுவே பள்ளி செல்லும் குழந்தைகளை இருசக்கர வாகனங்களில் ஏற்றிக் கொண்டு, சிரமத்துடன் பெற்றோர் செல்வதை காண முடிந்தது. கிராமப் புறங்களில் இருந்து மாணவர்கள் பேருந்தில் ஏறி, நனைந்தபடியே பள்ளிகளுக்குள் சென்றனர். இந்நிலையில் காலை 8.10க்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதும், மீண்டும் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.

அறிவிப்பு தாமதமாக வந்ததைத் தொடர்ந்து, சில தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close