கொடுக்கச் சொன்னதால கொடுத்தேன்... எடப்பாடிக்கு ‘புரட்சித் தமிழர்’ பட்டம் கொடுப்பது எனக்கே தெரியாது... ஆதினம் பேட்டி!


புரட்சித் தமிழர் எடப்பாடியார் பட்டம் வழங்கியபோது...

எடப்பாடி பழனிசாமிக்கு என்ன பட்டம் கொடுக்கப் போகிறோம் என்பது மேடைக்கு போகும் வரை எனக்கே தெரியாது என எடப்பாடி பழனிசாமிக்கு 'புரட்சித் தமிழர்' பட்டம் வழங்கிய மதுரை நிலையூர் ஆதினம் கூறியுள்ளது அதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலையூர் ஆதினம்

மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சித்தமிழர்’ என்ற புதிய பட்டம் சூட்டப்பட்டது. அதிமுக நிறுவனர் எம்ஜிஆருக்கு ‘புரட்சித் தலைவர்’ என்ற பெயரும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ‘புரட்சித் தலைவி’ என்று பட்டமும் இருப்பதைப் போல எடப்பாடி பழனிச்சாமிக்கு ‘புரட்சித் தமிழர்’ என்ற புதிய பட்டம் இந்த மாநாட்டில் சூட்டப்பட்டது.

இந்த பட்டத்தை மும்மதங்களைச் சேர்ந்த சர்வ சமயப் பெரியோர்கள் வழங்கினர். இது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொலை செய்துவிட்டு காட்டில் ஒளிந்து கொண்டிருந்த எடப்பாடி பழனிசாமி எப்படி ’புரட்சித் தமிழர்’ ஆனார் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் விமர்சித்திருக்கிறார்.

இந்நிலையில், மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம் வழங்கியவர்களில் ஒருவரான நிலையூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய சுவாமிகள் திருமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எடப்பாடி பழனிசாமிக்கு நாங்களாக முன்வந்து புரட்சித் தமிழர் பட்டத்தை சூட்டவில்லை. ஆர்.பி. உதயகுமாரின் ஆதரவாளரான நெல்லை பாலு என்பவரின் ஏற்பாட்டில், அவரது வேண்டுகோளுக்கிணங்கவே அந்த பட்டத்தை வழங்க அழைத்துச் செல்லப்பட்டோம்.

என்னை மட்டும் தனியாக அழைப்பதாக நினைத்து, கட்சி நிகழ்வுக்கு வர முடியாது என தெரிவித்தேன். ஆனால், ”நீங்கள் மட்டும் வரவில்லை. முஸ்லிம் ஹாஜியாரும், கிறிஸ்துவ மதத்தில் இருந்து பாதிரியாரும் வருகிறார்கள்” என்று எனது நண்பர் நெல்லை பாலு தெரிவித்தார். அதனால் மும்மதத்தின் சார்பில் அங்கு சென்றோம். நெல்லை பாலுவின் வேண்டுகோளுக்கிணங்கவே அவரது ஏற்பாட்டின் பேரிலேயே இந்தப் பட்டம் வழங்கப்பட்டது. நேரில் சென்ற பிறகு தான் புரட்சித் தமிழர் என்கிற பட்டம் வழங்கப்படுவதே எனக்குத் தெரியும்.

எடப்பாடி பழனிசாமி இந்தப் பட்டத்திற்கு ஏற்றவரா என்று நான் கூற முடியாது. ஏனென்றால் இந்தப் பட்டத்தை நான் வழங்கவில்லை" எனத் தெரிவித்தார். ஆதினத்தின் இந்த பேட்டி அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

x