[X] Close

கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்த புதுவை முதல்வர்: ட்விட்டரில் பாராட்டிய மோடி


modi-praises-narayanasamy

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Oct, 2018 09:35 am
  • அ+ அ-

கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர் வாரி சுத்தம் செய்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

அதில், "நாராயணசாமி அவர்களே உங்களுக்கு பாராட்டுகள். தூய்மை இந்தியா திட்டத்தின் முன்னோடியாக திகழ்ந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கிறீர்கள்" எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக, புதுச்சேரியில் கடந்த ஒருவார காலமாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளில் தூய்மைபடுத்தும் பணியை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு வருகின்றன. முதல்வர் தொகுதியான நெல்லித்தோப்பிலுள்ள சாரம் பகுதியில் அமைந்துள்ள சின்ன மார்க்கெட்டில் தூய்மைப் பணியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைத்தார். அப்போது தூய்மைப் பணியை ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி மார்க்கெட் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டிருந்ததைக் கண்டார்.

உடனடியாக சற்றும் தாமதிக்காமல் முதல்வர் நாராயணசாமி அருகில் இருந்த ஊழியர்களிடம் இருந்து மண்வெட்டியை வாங்கி கையுறை மட்டும் அணிந்து கொண்டார். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கழிவுநீர் கால்வாயில் இறங்கி தூர் வாரும் பணியை மேற்கொண்டார்.

மண்வெட்டியால் கழிவுநீர் கால்வாயில் இருந்த மண்ணை அள்ளினார். அங்கிருந்த அடைப்பை அகற்றிவிட்டுதான் மேலே வந்தார். சுமார் பத்து நிமிடங்கள் அப்பகுதியில் முதல்வர் தூர் வாரியதைப் பார்த்து அங்கிருந்த கட்சியினர் தொடங்கி பொதுமக்களும் வேடிக்கை பார்த்தனர்.

 

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close