திரைப்பட சூட்டிங்கிற்கு எனக் கூறி கள்ள நோட்டை அச்சடித்து, அதனை காய்கறி உள்ளிட்ட கடைகளில் மாற்றிய முன்னாள் ராணுவ வீரர் மற்றும் வழக்கறிஞரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளனர்
சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் பகுதியைச் சேர்ந்த மணி, தினேஷ் என்ற சகோதரர்கள், வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகே பிளாட்பாரத்தில் காய்கறி மற்றும் பழங்கள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம் கள்ளநோட்டு புழக்கத்தில் இருந்து வந்துள்ளது.
இவர்கள் கோயம்பேடு மொத்த சந்தையில் காய்கறிகள், பழங்கள் வாங்கும் போது, தங்களிடம் இருந்து கள்ள நோட்டுக்களை கொடுத்து மாற்றி வந்துள்ளனர். கோயம்பேடு வியாபாரிகள் பணத்தை வங்கிகளில் செலுத்துவதற்கு சென்ற போது, கள்ள நோட்டுக்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வியாபாரிகள் உஷாரான நிலையில், நுங்கம்பாக்கம் தினேஷ் மற்றும் மணி ஆகியோர் கொடுத்தது தான் கள்ளநோட்டு என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவர்களிடம் கூறி, பணத்தை மாற்றி சென்றதுடன், எச்சரிக்கை செய்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த மணி, தினேஷ் ஆகியோர், உஷாராக வியாபாரம் செய்ய தொடங்கினர். மாலை நேரங்களில் காய்கறிகள், பழங்கள் வாங்க கூட்டம் அதிகமாக இருக்கும் போது சிலர் கள்ளநோட்டுகளை கொடுத்து காய்கறிகள் வாங்கி சென்றிருக்கலாம் என நினைத்து, எச்சரிக்கையுடன் இருந்தனர்.
இந்த நேரத்தில் தான், கடைக்கு வந்த ஒரு முதியவர் 670 ரூபாய்க்கு காய்கறி, பழங்கள் வாங்கி விட்டு, மூன்று புதிய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து சில்லறை கேட்டுள்ளார். மேலும் கூடுதலாக 500 ரூபாய்க்கும் சில்லறை கேட்டுள்ளார். இதனால் உஷாரான வியாபாரிகளான மணி, தினேஷ் ஆகியோர் அந்த 500 ரூபாய் நோட்டுக்களை ஆய்வு செய்தனர்.
அதில், அவை கள்ள நோட்டுகள் என்பது தெரிய வந்ததையடுத்து நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு தினேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த சென்ற போலீஸார், கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற முதியவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் அண்ணாமலை என்பதும், பள்ளிக்கரணையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் என்பதும் தெரிய வந்துள்ளது. அவர் கொடுத்த தகவலின் பெயரில் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் சுப்பிரமணியன் (62) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து வழக்கறிஞர் சுப்ரமணியனின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது, அங்கிருந்து ஒரு கட்டிங் மெஷின், ஒரு கவுண்டிங் மெஷின், 45 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், கோடீஸ்வரன் என்ற பெயரில் பிரமாண்டமாக விளம்பர படம் எடுக்க இருப்பதாகவும், அதற்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள் அடித்து தர வேண்டும் எனக் கூறி கடந்த மாதம் வடபழனி கங்கையம்மன் கோயில் தெருவில் உள்ள விகே.ஆர் பிரஸ்ஸில் 90 கட்டு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொடுத்த குமார் என்பவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.