ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் பூலித்தேவன் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சி நாளை மறுதினம் (ஆகஸ்ட் 20) நடைபெற உள்ளது. இதே போல் நெற்கட்டும் சேவல் கிராமத்தில் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி செப்டம்பர் முதல் தேதி அன்று நடைபெற உள்ளது.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும் தென்காசி மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு ஊர்களில் இருந்து பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் பங்கேற்க வருகை தருவர். இதனால் இந்நிகழ்ச்சிகளின் போது பல்வேறு அமைப்பினர் கூடும் நிலையில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம்.
இதன்படி இன்று மாலை தொடங்கி ஆகஸ்ட் 21 வரையிலும், ஆகஸ்ட் 30 மாலை தொடங்கி செப்டம்பர் 2 வரையிலும் தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வாள், கத்தி, லத்தி, கற்கள் போன்ற ஆட்சேபனைக்குரிய பொருட்களுடன் வரும் வாகனங்கள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊர்வலங்கள், அன்னதானம், பொங்கலிடுதல், பால் குடம் எடுத்தல் மற்றும் அனைத்து வகையான வாடகை வாகனங்கள், சுற்றுலா மோட்டார் வண்டிகள், டூரிஸ்ட் மேக்ஸி வண்டிகள் ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.