மஞ்சுவிரட்டு களங்களில் பெருமை சேர்த்த கருப்பர் கோயில் காளை மரணம்; ஊர் மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி


நலமுடன் இருந்தபோது, கருப்பர் கோயில் காளை

காரைக்குடி அருகே கருப்பர் கோயில் காளை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை அடுத்து, ஊரின் பாரம்பரிய வழக்கப்படி மாலை மரியாதை, ஊர்வலம், வாணவேடிக்கை என ஊர் மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ளது செவரக்கோட்டை கிராமம். இங்குள்ள வில்காபுலி கருப்பர் கோயிலில், நேர்த்திக் கடனாக வளர்க்கப்படும் காளைகள் ஊர் பெயரை காப்பாற்றும் விதமாக மஞ்சுவிரட்டு போட்டிகளிலும் பங்கேற்பது உண்டு.

அப்படி பெருமை வாய்ந்த கோயில் காளைகளை தங்கள் குடும்பத்து உறுப்பினர் போலவும், ஊரின் பெருமையாகவும் ஊர் மக்கள் பேணி வளர்த்து வந்தனர். சக மனிதராய் அந்த காளைகளை பாவித்து, உணவூட்டம் முதல் பராமரிப்பு வரை போஷித்தும் வந்தனர்.

சுற்றுவட்டார கிராமங்களின் திருவிழாக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு நிகழ்வுகளில் கருப்பர் காளைகளை களமிறங்கச் செய்வார்கள். அந்த காளைகளும் திமிரும் திமில்களுடன் மஞ்சுவிரட்டு போட்டிகளில் வாகைசூடி, செவரக்கோட்டை கிராமத்தினரின் நம்பிக்கையை காப்பாற்றி வரும். இந்த காளைகளில் ஒன்று உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்தது.

ஊரின் அடையாளமாகவும், பெருமைக்கு உரியதாகவும் விளங்கிய கருப்பர் கோயில் காளையின் இறுதிச்சடங்கை விமரிசையாக மேற்கொள்ள கிராமத்தினர் முடிவு செய்தனர். அதன்படி இறந்த உறவினருக்கான இறுதி மரியாதை போல, மேளதாளத்துடன் சீர்வரிசை எடுத்து வந்து சிறப்பித்தனர். பின்னர் கருப்பர் காளையை குளிப்பாட்டி, பன்னீர், மஞ்சள், இளநீர், சந்தனம், குங்குமம் கொண்டு அலங்கரித்தனர். மேலும் மாலைகள், வேஷ்டி, துண்டு அணிவித்து அலங்காரம் செய்தனர்.

அதன் பின்னர் கிராமத்து பெண்கள் கண்ணீர் மல்க ஒப்பாரி மற்றும் குலவைகள் ஒலிக்க, மாட்டு வண்டியில் வைத்து ஊர் மக்களே இழுத்துச்சென்று நல்லடக்கம் செய்தனர். அங்கே நினைவுத்தூண் நட்டு, தங்கள் கிராமத்து தெய்வங்களில் ஒன்றாக கருப்பர் கோயில் காளையை அதன் இறப்புக்கு பின்னரும் சிறப்பிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

x