தியேட்டர்களில் ப்ளூ ஃபிலிம் ஓட்டியவர்தான் இன்று அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் உட்கார்ந்துள்ளார் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமாரை மிக கடுமையாக விமர்சித்துள்ளார் முன்னாள் முதல்வரான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் குமாரசாமி.
கர்நாடகாவில் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்கு வங்கியான ஒக்கலிகா கவுடா ஓட்டுகளை அப்படியே காங்கிரஸுக்கு கொண்டு போய்ச் சேர்த்தார் டிகே சிவகுமார். இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தலில் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இந்த முறை வெறும் 19 இடங்களில்தான் அக்கட்சி வென்றது. தற்போது வேறுவழியே இல்லாமல் பாஜகவுடன் கை கோர்த்து நிற்கிறது மதச்சார்பற்ற ஜனதா தளம்.
இதனால் கடும் கோபத்தில் இருக்கும் குமாரசாமி, டிகே சிவகுமாரை டார்கெட் செய்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதன் உச்சகட்டமாக, கர்நாடகாவில் தமக்கு சொந்தமான தியேட்டர்களில் ஃப்ளூ பிலிம் ஓட்டியவரைத்தான் இன்று கர்நாடகா மக்கள் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என விமர்சித்தார். டிகே சிவகுமார் பெயரை சொல்லாமல் இருந்தாலும் சிவகுமார்தான் தியேட்டர்களை நடத்தி வருபவர் என்பது அனைவரும் அறிந்தது.
குமாரசாமியின் இந்த கடுமையான விமர்சனம் குறித்து டிகே சிவகுமார் அளித்த பதில்: ஒரு மாநிலத்தின் முன்னாள் முதல்வர், மூத்த அரசியல் தலைவர் இப்படியா பேசுவது. என்னுடைய தொகுதிக்கு குமாரசாமி போகட்டும். அங்கு போய் மக்களிடம் கேட்கட்டும். ப்ளூ பிலிம் ஓட்டுகிறவனாக இருந்தால் என்னை சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்திருப்பார்களா? அப்படியான சட்டவிரோத செயல்களை நான் செய்கிறேன் என குமாரசாமியோ அல்லது வேறு ஒருவரோ நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்துவிட்டால் ஒட்டுமொத்தமாக அரசியலைவிட்டே விலகிவிடுகிறேன். குமாரசாமிக்குதான் இப்படி பேசுவது அசிங்கம் அவமானம். இன்றைக்கும் எனக்கு சொந்தமான தியேட்டர் இருக்கிறது. அங்கே போய் என்ன படம் ஓடுகிறது என பார்த்துவிட்டு பேசவும்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...