திண்டுக்கல் அருகே அரசு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் எம்எல்ஏவின் பெயருக்குப் பின் உணவுத்துறை அமைச்சர் என போடப்பட்டிருந்ததால் விழாவிற்கு வந்த பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திண்டுக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டனூத்து, வெள்ளோடு, சிறுமலை ஊராட்சிகளிலும், பொன்னகரம் பகுதியிலும் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்காக தற்காலிக மேடை மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிகளை துவக்கி வைப்பதற்காக அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் வருவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அமைச்சர் சக்கரபாணி மட்டும் கலந்து கொண்டார்.
அவருடன் மக்களவைத் தொகுதி உறுப்பினர் வேலுச்சாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனர் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதில் அமைச்சர்கள் பெரியசாமி, அர.சக்கரபாணியுடன், பழநி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் பெயரும் இடம் பெற்றிருந்தது.
அதில் செந்தில்குமாரின் பெயருக்கு கீழே, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரே பேனரில் இரண்டு உணவுத்துறை அமைச்சர்கள் என குறிப்பிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது பொதுமக்களிடையே பேசு பொருளாக மாறியது.
மேலும் திட்ட மதிப்பீடுகள் தொடர்பான பகுதியிலும், ஊர் பெயர்கள் தவறாக இடம்பெற்று இருந்ததாக மக்கள் தெரிவித்தனர். அதிகாரிகள் இதனைக் கவனிக்காமல் எப்படி பேனர் அடிக்க அனுமதி அளித்தனர் என தற்போது கேள்வி எழுந்துள்ளது. இந்த பேனர் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.