விவசாய நிலத்திற்கு தண்ணீர் தேடி வந்த அரிய வகை இந்திய கழுகு ஆந்தையை, தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வீலி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வைரவன் (50). இவர் தனது விவசாய நிலத்திலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். இன்று காலை தோட்ட பகுதியில் உள்ள ஒரு மரத்திற்கு அடியில் வித்தியாசமான ஆந்தை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்பு படை வீரர்கள், தோட்டப் பகுதியில் இருந்த ஆந்தையை மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆந்தையை அடர்ந்த காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர்.
கடவகுறிச்சி மலைப்பகுதிக்கு அருகே வைரவன் தோட்டம் அமைந்துள்ளது. அந்த மலைப்பகுதியில் இருந்து இந்த அரிய வகை பறவை தண்ணீர் தேடி தோட்டப்பகுதிக்கு வந்திருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்திய கழுகு ஆந்தை என்பது மிகவும் அரிதான பறவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.