சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் 10-வது முறையாக வரும் புதன்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது. அதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது.
எனினும், நேரடியாகவோ, மறைமுகமாகவோ சாட்சிகளை கலைத்து விடுவார் என்பதால், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து, ஜாமீன் வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் பெலா திரிவேதி மற்றும் சதீஷ் சந்திர சர்மா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 6-வது நாளாக அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.