துடைப்பக்கட்டையால் ஆசீர்வாதம் வழங்கப்படும்: மிரட்டலால் இலங்கை பயணத்தை ரத்து செய்த குஷ்பு!


தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு

இலங்கையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்றால் துடைப்பக்கட்டையால் ஆசீர்வாதம் செய்யப்படும் என தமிழர் அமைப்பினர் எச்சரித்ததை அடுத்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பாடகர் ஹரிஹரனின் இசைநிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு

ஆனால் முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, ஈழத்தமிழர் போராட்டம் பயங்கரவாதம் என குஷ்பு விமர்சித்திருந்தார். இதனால், அவர் இலங்கைக்கு எப்போது வந்தாலும் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என ஈழத்தமிழர் அமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதன்படி, நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வெளியானவுடன், இலங்கை வடக்கு மாகாண கடல் தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்ரமணியம், நடிகை குஷ்பு இலங்கைக்கு வருகை தந்தால் துடைப்பக்கட்டை ஆசீர்வாதம் வழங்கப்படும் என எச்சரித்திருந்தார்.

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு

இதையடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் முடிவை கைவிடுவதாக குஷ்பு முடிவு செய்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ள குஷ்பு, “ யாருக்கும் அஞ்சி இந்த முடிவை எடுக்கவில்லை. என் மாமியாரின் இதய அறுவை சிகிச்சையை முன்னிட்டே நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான டிடி என்ற திவ்யதர்ஷினி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

x