திமுக அரசால் மட்டுமல்ல... எந்த மாநில அரசாலும் நீட் விலக்கு பெறமுடியாது! - தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்


வேல்முருகன்

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றவராக இருந்தாலும் தவறு என்று பட்டதை எதிர்க்கவும் சுட்டிக்காட்டவும் சிறிதும் தயங்காதவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். சட்டப் பேரவையிலும் சரி, பொதுவெளியிலும் சரி திமுக மீதான தனது விமர்சனத்தை தயங்காமல் வைக்கும் அவரிடம் தற்போதைய அரசியல் சூழல் குறித்து உரையாடினோம்.

நீட் விவகாரத்தால் திமுகவால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை என்று பட்டவர்த்தனமாக கூறியிருக்கிறீர்களே..?

ஆமாம். திமுக அரசால் மட்டுமல்ல... இந்தியாவில் உள்ள எந்த மாநில அரசாலும் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறமுடியாது. ஏனென்றால் மத்திய அரசு நீட் தேர்வு தேவை என்பதில் மிக உறுதியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ஒப்புதல் கிடைத்தால்தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும். அது இப்போதைய மத்திய அரசாங்கம் இருக்கும்வரை நடக்காது.

பிறகு எதற்காக ‘நீட் விலக்கு நம் இலக்கு’ என்று கையெழுத்து இயக்கம் நடத்துகிறது திமுக?

இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம் அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க முடியும். அதனால்தான் திமுக அதைச் செய்கிறது. ஆனால், மத்திய பாஜக அரசு நீட் தேர்வு விஷயத்தில் உறுதியாக இருக்கிறது.

உங்கள் முன்னாள் கூட்டாளியான அதிமுக இப்போது எப்படி இருக்கிறது?

கடந்தகால அதிமுக போல இப்போது வலுவோடு இல்லை. ஓபிஎஸ், சசிகலா, தினகரன், திவாகரன் என பிரிந்து போய் கிடக்கிறது. அதற்கு வலுவான கூட்டணியும் சரியாக அமையவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி முறிவு நாடகம் என்று திமுகவும் அதன் கூட்டணிக்கட்சிகளும் சொல்கின்றனவே..?

அப்படி நாடகமாக இருந்தால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியதாக மாறிவிடும். தற்போதுள்ள இதேநிலை தொடர்ந்தால் ஒருவேளை இஸ்லாமியர்களும், திமுக மீது அதிருப்தியில் இருப்பவர்களும் அதிமுகவுக்கு வாக்களிக்க வாய்ப்பிருக்கிறது. திரும்பவும் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதெல்லாம் கிடைக்காமல் போய்விடக்கூடும்.

அந்த கூட்டணி முறிவு நாடகம் என்பதற்கு உங்களின் நேரடி பதில்?

என்னுடைய கணிப்பின்படி கூட்டணி முறிவு உண்மைதான் என்று தோன்றுகிறது.

பிரிந்து கிடக்கும் அதிமுகவை ஒன்றுசேர்க்க பாஜக அழுத்தம் கொடுக்கிறது. அதனால் தான் இபிஎஸ் கூட்டணியை முறித்துக்கொண்டார் என்று சொல்லப்படுகிறதே?

ஒருவேளை, அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இரண்டாவதாக, இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்களின் வாக்குகளைப் பெறவும், மாநிலம் மற்றும் மாநிலம் சார்ந்த மக்களின் பிரச்சினைகளையும் பேசினால் தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று அதிமுக நம்புவதாக நான் கருதுகிறேன்.

எப்படி இருக்கிறது எடப்பாடி பழனிசாமியின் தலைமை?

அவரை நம்புகிற, அவரை ஏற்றுக்கொண்டிருக்கிற கட்சிக்காரர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவராக அவர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மற்றபடி எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்து தலைமையைப் போல இப்போதுள்ள தலைமை இல்லை. செயல்பாடுகள் இல்லை, வேகமுமில்லை.

நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற உங்களது கோரிக்கை எந்த அளவில் இருக்கிறது?

திமுக பரிசீலனை செய்து முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அவர் அதில் கையெழுத்திடாமல் காலம் தாழ்த்துகிறார். இது ஏற்புடையதில்லை. ஆளுநரின் இந்த அடாவடித்தனத்தையும், சண்டித்தனத்தையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

வேல்முருகன்

ஆளுநர் எதிர்ப்பில் உங்களுக்கு முன்பிருந்த வேகம் தற்போதும் உள்ளதா?

ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தி இன்னும் ஒருமாதம்கூட ஆகவில்லை. மக்களின் பண்பாடு, தமிழ்நாடு என்ற பெயர் சார்ந்த, மொழி சார்ந்த விஷயங்களிலும் தலையிட்டு தேவையில்லாத மிக மோசமான கருத்துக்களை கூறிவருகிற ஆளுநர் அவர்களை முன்பைக் காட்டிலும் இன்னும் வேகமாக எதிர்க்கிறேன்; எதிர்ப்பேன்.

ஆளுநர், ஆர்எஸ்எஸ் முகமாக செயல்படுகிறார் என்று சொல்லப்படுவது குறித்து?

உண்மைதான். அவர் வாயிலிருந்து வருகிற பொன்மொழிகள் எல்லாம் அவர் பக்கவான ஆர்எஸ்எஸ் என்பதைத்தான் வெளிக்காட்டுகிறது.

தமிழக, பஞ்சாப் மாநில ஆளுநர்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கேள்விகளை எழுப்பியுள்ளதே?

அதை வரவேற்கிறேன், உச்சநீதிமன்றம் தனித்துவத்தோடும், நேர்மையோடும், நீதியோடும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நிரூபிக்கும் வகையில் அவர்களின் தலையில் ஓங்கிக் குட்டியுள்ளது. இது பாராட்டுக்குரியது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக அதிமுகவும் பாஜகவும் சொல்வது பற்றி..?

அந்தக் கட்சிகள் சட்டம் - ஒழுங்கு சீர் குலைந்துள்ளதாக கூறுவதை நான் மறுக்கிறேன். ஆனால், வேறு சில விஷயங்களில் அரசாங்கம் உடனடியாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன். இதை அரசுக்கு கோரிக்கையாகவும் வைக்கிறேன்.

அப்படி எந்த விஷயங்களில் அரசு வேகமாக செயல்பட வேண்டும் என்கிறீர்கள்?

முதலில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும். எல்லா கொடிய குற்றங்களுக்கும் தாய் மடியாக இருப்பது டாஸ்மாக் தான்; மதுதான். இதனால் ஆண்டுக்கு ஆண்டு குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. முன்பெல்லாம் பெரியவர்கள் குடித்தார்கள், பிறகு நடுத்தர வயதினர் குடித்தார்கள், பிறகு இளைஞர்கள் குடித்தார்கள். அதன்பிறகு கல்லூரி மாணவர்கள் குடித்தார்கள். பின்னர் பள்ளி மாணவர்கள் குடித்தார்கள். இப்போது பள்ளி மாணவிகளும் குடிக்க ஆரம்பித்துள்ளனர். இதை ஒருகாலத்திலும் நாம் அனுமதிக்கக் கூடாது. அதனால் கடைகளை படிப்படியாகவாவது மூடவேண்டும் என்பது என் வேண்டுகோள்.

அடுத்ததாக, தமிழ்நாடு முழுவதும் வெகு எளிதாக கஞ்சா, அபின், போதை மாத்திரைகள் கிடைப்பதாக பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் நாள்தோறும் செய்திகள் வெளிவருகின்றன. இதுகுறித்து முதல்வரும்கூட கவலைப்பட்டு அதிகாரிகளை கடிந்து கொண்டிருக்கிறார். ஆனாலும் இன்னும் முழுமையாக அவை கட்டுப்படுத்தப்படவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகள் இதை கட்டுப்படுத்தவும் மட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த வழியாக மாணவர்களுக்கு கஞ்சா, அபின் போன்றவை கிடைக்கிறதோ அதை அடைக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வேல்முருகன்

அடுத்ததாக, பிக் பாஸ் என்ற கேலிக்கூத்தான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அரசு உடனடியாக கண்காணிக்க வேண்டும். படுக்கை அறையில் செய்யவேண்டியதை எல்லாம் அந்த வீட்டில் பட்டவர்த்தனமாக செய்வதையும் அதை அப்படியே ஒளிபரப்பு செய்வதையும் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

அதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?

தொலைக்காட்சிக்கு தணிக்கை கிடையாது என்பதால் அவர்கள் எதை வேண்டுமானாலும் மக்களுக்கு காட்டலாம் என்று நினைப்பது தவறு. அதை அரசாங்கம் தலையிட்டு ஒழுங்கு படுத்தவேண்டும். சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.

அதற்குபிறகும் அவர்கள் திருத்திக்கொள்ளவில்லை என்றால், பணத்துக்காக இப்படிப்பட்டவற்றை நிகழ்த்தினால் எல்லா தரப்பு மக்களும் பார்க்கிற ஒரு நிகழ்ச்சியை இப்படி காட்டுவதை விட, புளூஃபிலிம் எடுத்து ஒளிபரப்பிவிட்டு போகலாமே? இதையெல்லாம் ஒருகாலத்திலும் அனுமதிக்கவே கூடாது.

அன்பிற்குரிய உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் இதுபோன்ற கீழ்த்தரமான, கேவலமான, பண்பாடற்ற நிகழ்சிகளில் பங்குபெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். கேவலமான வசனங்களும் படுக்கையறை காட்சிகளும் இடம்பெறும் காட்சிகளை மக்களின் வீட்டிற்கே கொண்டுபோய் காண்பித்து பணம் சம்பாதிக்கும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிர்வாகமும் உலகநாயகனும் தவிர்க்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

அடுத்ததாக, பேருந்தில் மாணவர்கள் தொங்கிக்கொண்டுப் போவதை தடுக்க அரசு உடனடி நடவடிகை எடுக்கவேண்டும். அப்படி மாணவர்கள் போவதை ஓட்டுநர், நடத்துநர் கண்டிக்க முடியாது. கேட்டால் அடிக்கிறார்கள். போக்குவரத்து காவலர்களும் ஆர்டிஓ-வும் கூட இதையெல்லாம் ஒழுங்குபடுத்துவதில்லை. இதை பாஜக பெண்மணி ஒருவர் கண்டித்தது வரவேற்கத்தக்கது தான். ஆனால், அவர் நாய் என்று சொல்லியிருக்கக் கூடாது; அடித்திருக்கக் கூடாது. அதேசமயம் தாயுள்ளத்தோடு அவர் செய்த செயல் சரிதான். அதற்காக காவல்துறை அவரை கைது செய்தது தவறான ஒன்று. கண்டித்து விட்டிருக்கலாம்.

x