இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் எஸ்.வெங்கடரமணன் வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானார். அவருக்கு வயது 92. இவர் தமிழகத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் தந்தையும், நடிகர் எஸ்.வி.சேகரின் உறவினருமாவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் ஒருவர் முன்னாள் தமிழ்நாடு தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு அங்கமாக இருந்த நாகர்கோவிலில் பிறந்த வெங்கடரமணன், இந்திய ரிசர்வ் வங்கியின் 18வது கவர்னராக இருந்தவர். இவர் 1990ம் ஆண்டில் இருந்து 1992ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்தார். 1985ம் ஆண்டு முதல் 1989 வரை மத்திய நிதித்துறை செயலாளராகவும் இருந்தவர். கர்நாடகா அரசின் ஆலோசகராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக பதவியேற்ற நேரம் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கடுமையாகக் குறைந்து, இக்கட்டான நிலை ஏற்பட்டிருந்தது. அந்த நெருக்கடியை சிறப்பாக கையாண்டு, நாட்டை மீட்டதில் பெரும் வெற்றி பெற்றார். மேலும், 1992ம் ஆண்டு பங்குச் சந்தை ஊழலால் வங்கிகளின் செயல்பாடு நிலைகுலைந்து போயிருந்த சூழலில் இவர் எடுத்த நடவடிக்கையால் வங்கிகளில் நிலைத்தன்மை ஏற்பட்டது.
வெங்கடரமணன் ஓய்வுக்குப் பிறகும், அசோக் லேலண்ட் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் லிமிடெட், நியூ திருப்பூர் ஏரியா டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் உட்பட பல்வேறு நிறுவனங்களின் தலைவராக பணியாற்றினார். மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஸ்பிக், பிரமல் ஹெல்த்கேர் லிமிடெட், தமிழ்நாடு வாட்டர் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் மற்றும் ஹவுசிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் போன்ற வாரியங்களின் பொறுப்புகளிலும் இருந்தார்.
இதையும் வாசிக்கலாமே...