ஆளுநர் விவகாரத்தில் அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்; ரவிக்குமார் வலியுறுத்தல்!


ரவிக்குமார் எம்.பி

ஆளுநரை பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதில்லை என மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பல்கலைக்கழங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநர்களை நீக்கும் சட்டங்களை இயற்றி வருகின்றன. ஆனால், அந்தச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிலையில் ஆளுநர்களே இருப்பதால், அவர்கள் அந்த ஒப்புதல் அளிப்பதை தள்ளிப்போட்டு வருகின்றனர். இதன் காரணமாக மாநில அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. குறிப்பாக கேரளம் மற்றும் தமிழகத்தில் இந்த விவகாரம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்த நிலையில் பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக ஆளுநரை நியமிக்க கூடாது என மாநில அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து காமதேனு இணையத்திடம் ரவிக்குமார் இன்று பேசினார். “இந்தியாவில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் கிட்டத்தட்ட 85% பேருக்கு மாநில அரசுகள் உருவாக்கிய பல்கலைக் கழகங்கள்தாம் உயர்கல்வியை வழங்குகின்றன” என 2019-20ம் ஆண்டுக்கான உயர்கல்வி குறித்த அனைத்திந்திய ஆய்வறிக்கை (AISHE) தெரிவிக்கிறது.

மாநில அரசு உருவாக்கும் பல்கலைக்கழகங்களுக்கு வேந்தராக ஆளுநரை நியமிப்பது நாமே நமக்கு விலங்கு மாட்டிக்கொள்வதற்கு ஒப்பானதாகும். அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்படாத ஆளுநரின் தன்விருப்ப நடவடிக்கைகளில் (discretion ) மாநில அமைச்சரவை தலையிட முடியாது என அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 163 கூறுகிறது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி

எனவே, அரசியலமைப்புச் சட்டத்தால் முன்வைக்கப்படாத ‘ பல்கலைக்கழக வேந்தர்’ முதலான சட்டப்பூர்வ அதிகாரங்களை ஆளுநருக்கு வழங்குவதை மாநில சட்டமன்றங்கள் தவிர்க்க வேண்டும் என்று சர்க்காரியா கமிஷன் பரிந்துரைத்துள்ளது. ஆளுநரை வேந்தராக நியமிப்பதால் வீண் சர்ச்சைகளுக்கும், பொது மக்களின் விமர்சனங்களுக்கும் அவர் ஆளாக நேரிடும் என பூஞ்சி கமிஷன் தெரிவித்துள்ளது. எனவே ஆளுநர் பதவி முற்றாக ஒழிக்கப்படும்வரை ஆளுநரை இனி பல்கலைக்கழக வேந்தராக நியமிப்பதில்லை என்ற கொள்கை முடிவைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்" என்று ரவிக்குமார் தெரிவித்தார்.


இதையும் வாசிக்கலாமே...

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

x