பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள தமிழ் மாநில காங்கிரஸின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் நிர்வாகிகள் பலரும் விலகி வருவதால் தேர்தலுக்குள் அந்த கட்சியின் பலம் வெகுவாக குறைந்துவிடும் என்று கூறப்படுகிறது.
ஜி.கே.வாசன் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூப்பனார் காலத்தில் இருந்த செல்வாக்கு முற்றிலுமாக குறைந்து போய் தற்போது மாநில, மாவட்ட அளவிலான ஒரு சில நிர்வாகிகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்த அந்த கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. அதில் அக்கட்சியின் வேட்பாளர் போட்டியிட்டு தோல்வியுற்ற நிலையில், ஜி.கே.வாசனுக்கு பாஜக பரிந்துரையின் பேரில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக - அதிமுக கூட்டணியில் பிரிவு ஏற்பட்டது. அதனால் அந்த கூட்டணியில் இருந்த கட்சிகள் எந்த பக்கம் செல்வது என்று தவித்து நின்றன. பாமக மற்றும் தேமுதிகவை அதிமுக தங்கள் பக்கம் கொண்டு சென்றுள்ள நிலையில் மீதமிருந்த சிறு கட்சிகளை பாஜக தங்கள் அணியில் சேர்த்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க தமிழ் மாநில காங்கிரஸின் நிர்வாகிகள் சென்னையில் கூடி ஆலோசனை நடத்தினர். அதில் பெரும்பாலானவர்கள் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால் ஜி.கே.வாசனோ திடீரென பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து விட்டார். இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே சேலத்தில் இருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி செயலாளர் யுவராஜா சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தமாகா தலைமை நிலையச் செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவரும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவருமான காளிமுத்து, கல்பகனூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாத்தி காளிமுத்து ஆகியோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இப்படி ஒவ்வொருவராக அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இணைந்து வருவதால் தமிழ் மாநில காங்கிரசின் பலம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக கூட்டணியில் தங்களுக்கு மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மூன்று தொகுதிகள் வேண்டும் என்று தாமாக கேட்டுக் கொண்டுள்ளது. என்னதான் சீட்டு வாங்கி போட்டியிட்டாலும் தேர்தலுக்குப் பிறகு அந்த கட்சி எஞ்சி இருக்குமா என்ற கேள்வி பலராலும் கேட்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!
பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!