கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள் பறிமுதல்


கோவை மாநகர பகுதியில் உணவுப் பாதுகாப்புத் துறையின் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட செயற்கை முறையில் பழுக்க வைத்த 16.1 டன் மாம்பழங்கள்.

கோவை: கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்களை, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகரில் வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி-1, பவள வீதி-2, கருப்ப கவுண்டர் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில் இன்று (மே 23) காலை கள ஆய்வு மேற்கொண்டனர். இதில், கிடங்குகள் மற்றும் மொத்த விற்பனை கடைகள் என மொத்தம் 55 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

அதில் 15 கிடங்குகள் மற்றும் 16 மொத்த விற்பனை கடைகளில் சிறிய ரசாயன பொட்டலங்களை வைத்து பழுக்கவைக்கப்பட்ட 16,107 கிலோ (16.1 டன்) மாம்பழங்களும், 100 கிலோ அழுகிய ஆப்பிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு ரூ.12 லட்சமாகும்.

பறிமுதல் செய்த பழங்கள் மாநகராட்சி குப்பை கிடங்கில் உள்ள உரக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டு, அதன் பின்னர் அதை உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில்,"கோவையில் 16.1 டன் செயற்கையாக பழுக்கவைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து 21 மொத்த விற்பனை கடைகள் மற்றும் கிடங்குகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது.

மேலும், இது போன்று சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் செயற்கை முறையில் பழங்களைப் பழுக்க வைக்க பயன்படுத்திய ரசாயன பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. கார்பைட் கல், எத்திலீன் ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை கொண்டு பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களை உண்பதால் வயிறு தொடர்பான பிரச்சினைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி, பேதி போன்ற உபாதைகள் உண்டாகலாம்.

சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதில் ஆர்சானிக் மற்றும் பாஸ்பரஸ் இருந்தால் புற்று நோய் உண்டாகவும் வாய்ப்புள்ளது. உடலில் நீர் வறட்சி ஏற்பட்டு உடல் வலுவிலக்க வாய்ப்புள்ளது. எனவே, முறையற்ற விகிதத்தில் ரசாயனங்கள் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்கள் இதுபோன்ற குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 94440 42322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ் - அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்" என்றார்.