அரசு பேருந்தில் பயணிகள் இருந்த நிலையில் அந்த பேருந்தை ஓரமாக நிறுத்திவிட்டு நடத்துநர் பேருந்தில் படுத்து தூங்கியுள்ள சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து ஆந்திர எல்லை பகுதியான கொத்தூர் வரை B7 என்ற எண் கொண்ட அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று நாட்றம்பள்ளியை அடுத்த பச்சூர் பகுதியில், பேருந்தில் பயணிகள் அமர்ந்திருக்கும்போதே ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பேருந்தை ஓரம் கட்டி நிறுத்தியுள்ளனர். அதன்பின் ஓட்டுநர் வெங்கடேசன் பேருந்தில் இருந்து இறங்கிவிட, நடத்துநர் புஷ்பராஜ் பேருந்திலேயே படுத்து உறங்கியிருக்கிறார். இதனால் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் பேருந்திலேயே பயணிகள் காத்துக் கிடந்தனர்.
இந்நிலையில், பேருந்தில் நடத்துநர் உறங்கிக் கொண்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியாக திருப்பத்தூரில் இருந்து ஆந்திரா எல்லைப் பகுதி கொத்தூர் வரை, நாள்தோறும் ஐந்து முறை பேருந்து சென்று திரும்ப வேண்டும். ஆனால் இப்பேருந்து நாள் ஒன்றுக்கு இரண்டு முறை மட்டுமே செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.