போலியான கல்விச் சான்றிதழ் வழங்கி பணியாற்றி வந்ததாக எழுந்த புகாரின் பேரில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 58 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகம் கடந்த 2012ம் ஆண்டில் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்றுக்கொண்டது. இதையடுத்து, அப்பல்கலைக்கழகத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழல் புகார்கள், முறைகேடாக நியமிக்கப்பட்டவர்கள், பேராசிரியர் நியமனத்தில் விதிமீறல் என ஏற்கெனவே இருந்த புகார்கள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக இணை பேராசிரியர்கள் 58 பேர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரும் தகுதியில்லை என்ற அடிப்படையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை பரிந்துரையின் பேரில் அவர்களை பணி நீக்கம் செய்து பதிவாளர் (பொறுப்பு) ஆர்.சிங்காரவேலு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முன்னதாக, தகுதிக் குறைவானவர்களாக நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் நீக்கப்பட்டு, முறையாக சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்கப்படுவர் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியிருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.