ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டுயானைகள், புலிகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் காணப்படுகின்றன. இந்த நிலையில், பர்கூர் மலைப்பகுதியில் உள்ள கொங்காடை மலை கிராம பகுதியில் இரவு நேரங்களில் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதாவது இரவு நேரத்தில் பூட்டி இருக்கும் வீட்டு கதவுகளை தட்டுகின்றன. ஆட்கள் தான் யாராவது வந்துள்ளார்கள் என நினைத்து வீட்டில் வசிப்பவர்கள் கதவை திறக்கிறார்கள்.
உடனே கரடி வீட்டுக்குள் புகுந்து அங்குள்ள உணவு பொருட்களை சாப்பிட்டும், சேதப்படுத்தியும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கொங்காடை மலை கிராமமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஏற்கெனவே, காட்டுயானைகள் அடிக்கடி வனப்பகுதி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வந்தது. இதனால் தோட்டங்களை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டன.
மேலும் வனத்துறை சார்பில் அகழியும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இந்த அகழியையும் தாண்டி கொங்காடை மலை கிராமத்துக்குள் கரடிகள் வருகின்றன. நல்வாய்ப்பாக இதுவரை கிராம மக்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெறவில்லை. ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் வீடுகளுக்குள் கரடிகள் புகுவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.