மதுரை: மதுரை மாநகராட்சியில் ‘கரோனா’ காலத்தில் பூட்டியிருந்த கடைகளுக்கு ரூ.7.95 கோடி வாடகை பாக்கியை மாநகராட்சி நிர்வாகம் தள்ளுபடி செய்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் ‘கரோனா’ முதல் அலை மற்றும் 2-வது அலை காலக்கட்டங்களில் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர். அத்தியாவசிய அரசு துறைகள் தவிர மற்ற அரசு, தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள் செயல்படவில்லை. பொதுமக்கள், காய்கறிகள், உணவுப் பொருட்கள் வாங்க மட்டுமே பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து வீட்டை விட்டு வெளியே வந்தனர். பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்து நிலையங்கள் பயணிகள் வராமல் மூடப்பட்டன.
அதனால், தமிழகம் முழுவதும் காரோனா அலை நிலவிய காலகட்டத்தில் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் செயல்பட்ட மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு சொந்தமான கடைகள் மூடப்பட்டன. இதனால் வியாபாரிகள் பெரிதும் நஷ்டம் அடைந்தனர். கரோனா காலகட்டத்தில் அன்றாட வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டனர்.
அதன்பிறகு கரோனாவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் கடைகளை திறந்தபோது, உள்ளாட்சி அமைப்புகள் கரோனா காலகட்டத்துக்கும் சேர்த்து வாடகை செலுத்தும்படி கேட்டு வியாபாரிகளுக்கு நெருக்கடி கொடுத்தன. அதனால், வியாபாரிகள் வேறு வழியில்லாமல் வாடகையை செலுத்தினர்.
மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளை டெண்டர் எடுத்தவர்கள், மாநகராட்சிக்கு மாதந்தோறும் வாடகை செலுத்தி வந்தனர். கரோனா காலத்தில் வியாபாரம் இன்றி கடைகளை பூட்டி இருந்தாலும் மாநகராட்சி நெருக்கடியால் பலரும் தொடர்ந்து வாடகையை செலுத்தினர்.
அதனால், மதுரை மட்டுமில்லாது தமிழக அளவில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கடைகளை டெண்டர் எடுத்தவர்கள், கரோனா காலத்தில் கடைக்கான வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர், உள்ளாட்சித் துறை அமைச்சர், ஆட்சியர், மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்தினர்.
இதை ஆய்வு செய்த தமிழக அரசு, கரோனா காலத்தில் முதல் அலை நேரத்தில் 2020-ம் ஆண்டு ஜூன் 1 முதல் செப்டம்பர் 31 வரையும், இரண்டாம் அலை நேரத்தில் 2021ம் ஆண்டு மே 1 முதல் ஜூன் 30 வரையும் உள்ள காலங்களில் மாநகராட்சி கடைகளுக்கு வாடகையை தள்ளுபடி செய்வதற்கு அரசாணை(337) வெளியிட்டது. அதன் அடிப்படையில், மதுரை மாநகராட்சி கடைகளுக்கு வாடகையை, ஆணையர் ரூ. 7.95 கோடியை தள்ளுபடி செய்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் கூறு கையில், ‘‘மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் 185 கடைகள், மண்டலம்-1-ல் 35 கடைகள், மண்டலம்-2-ல் 1,654 கடைகள், மண்டலம்-3-ல் 1,492 கடைகள், மண்டலம்-4-ல் 281 கடைகள், மண்டலம்-5-ல் 54 கடைகள் உட்பட மொத்தம் 3,516 மாநகராட்சி கடைகள் உள்ளன.
இந்தக் கடைகளுக்கு ரூ.7.95 கோடி தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்து. முறையாக வாடகை செலுத்திய கடைக்காரர்களுக்கு மட்டும் இந்த தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.’’ என்றனர்.