சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கின் விசாரணையிலிருந்து விலகுவதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவித்துள்ளார்.
கடந்த 2001-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்தும் விசாரிக்க அதிகாரம் வழங்கி, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் 2009ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. அனிதா ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துகளை 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடக்கியது.
சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவித்து, வழக்கை தலைமை நீதிபதி ஒப்புதலை பெற்று, வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிடும்படி பதிவுத்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.