டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம்... நன்மை, தீமை ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழக அரசு!


டாஸ்மாக்

டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக, டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் மதுபானங்களை டெட்ரா பாக்கெட்களில் அடைத்து விற்க மதுபானங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் புரியும் பிரதாப் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், பாலித்தின், அலுமினியம், காகிதம் ஆகியவற்றின் கலவையால் உருவாக்கப்படும் டெட்ரா அட்டையை மறுசுழற்சி செய்வதற்கான மையங்கள் இல்லை எனவும், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். டெட்ரா பேக்குகளில் அடைத்தால் உடல்நலக் குறைவு ஏற்படுவதுடன், மதுபானங்களை கடத்துவோருக்கு சாதகமாகவும் மாறிவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சம்சு நிஹார், அரசு தரப்பில் அரசு பிளீடர் முத்துகுமார், டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் சதீஷ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் சண்முகவள்ளி சேகர் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

டெட்ரா பாக்கெட்களில் மதுபானம் விற்பதால் ஏற்படும் நன்மை, தீமைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழு இன்னும் அரசுக்கு அறிக்கை அளிக்கவில்லை எனவும் டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் டாஸ்மாக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதிகள், தற்போதைய நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனவும், நிபுணர் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கலாம் என அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.

x