சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பான வழக்குகளில் 93 சதவீத வழக்குகளில் தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சகத்தின் இணையமைச்சா் பங்கஜ் சவுத்ரி எழுத்துபூா்வமாக பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பதிலில்," கடந்த 9 ஆண்டுகளில் அமலாக்கத் துறை விசாரித்த 31 சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்குகளுக்கு நீதிமன்ற விசாரணை நிறைவடைந்துள்ளது. அவற்றில் 29 வழக்குகளோடு தொடா்புடைய 54 குற்றவாளிகள் தண்டனை பெற்றுள்ளனா்.
நடப்பாண்டில் ஜூலை 13-ம் தேதி வரை சட்ட விரோத பணப் பரிவா்த்தனை வழக்குகளில் தண்டனை விகிதம் 93.54 சதவீதமாக உள்ளது. இதுவரை குற்றவாளிகளுக்குச் சொந்தமான ரூ.16,507 கோடி மதிப்பிலான சொத்துகள் நீதிமன்ற நடவடிக்கை மூலம் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவா்கள் மீது ரூ.4.64 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.