டாக்டர் ராமதாஸ் மருத்துவம் படிக்க கர்மவீரர் காமராஜரே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
திண்டிவனம் அருகே கோனேரி குப்பத்தில் அமைந்துள்ள மருத்துவர் ராமதாஸ் கல்வி அறக்கட்டளையில் நிறுவனர் நாள் விழா, மாணவிகள் தங்கும் விடுதி கட்டிட திறப்பு விழா மரக்கன்றுகள் நடும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா இன்று நடைபெற்றது, இவ் விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அன்புமணி ராமதாஸ், "மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படித்து உயர்ந்த பொறுப்புகளுக்கும் பதவிகளுக்கும் செல்ல வேண்டும். உங்கள் குடும்பத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இங்கே படிக்கின்ற மாணவ மாணவிகள் அத்தனை பேரும் உலக நாடுகளுக்குச் சென்று சுந்தர் பிச்சை போன்ற நல்ல பதவிகளுக்கு வரவேண்டும்.
மருத்துவர் ராமதாஸ் சிறுவயதில் கல்வி பயில முற்பட்ட போது கிராமத்தில் ஐந்தாவதுக்கு மேல் பள்ளிக்கூடம் கிடையாது. அதன் காரணமாக தன்னுடைய பள்ளிப்படிப்பை அப்போதே நிறுத்தி விடலாம் என முடிவு செய்தார். அதன் பிறகு பல்வேறு இன்னல்களை கடந்து மருத்துவம் படித்தார். அதற்கும் முக்கிய காரணம் கர்மவீரர் காமராஜர்.
இந்தியாவில் ஆறு இட ஒதுக்கீடுகளை பெற்றுத் தந்தவர் ராமதாஸ். கல்வி நிலையங்களில் ஓ.பீ.சி வகுப்பினருக்கு 27 விழுக்காடு பெற்று தந்து பலகோடி மாணவர்கள் கல்வி பயிலவும் ராமதாஸ்தான் காரணம். அவர் தன் பிறந்தநாளை மற்ற தலைவர்கள் போன்று கொண்டாடுவதில்லை அதை பசுமைத் தாயக நாளாக நாங்கள் அறிவித்து அவரது பிறந்த நாளான இன்று தமிழகம் முழுவதும் வெளிநாடுகளிலும் மரக்கன்றுகளை நடவு செய்து வருகின்றோம்" என்றார்.
தொடர்ந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியதாவது:- மாணவர்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அனைவரும் தரமாக கல்வி பயில வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். மேலும் இந்த கல்விக்கோயிலில் பல்வேறு மரங்களை நட்டு சாதனை செய்யவும் முயற்சி செய்து வருகிறோம்.
இந்த கல்வி கோயில் அமைவதற்கு பொருட்கள் மூலமாகவும் நிதி மூலமாகவும் உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவ்வாறு உதவி செய்த மாவட்டங்களில் முதலிடம் கடலூர் மாவட்டம், இரண்டாமிடம் சேலம் மாவட்டம் . சிறந்த கல்வியை வழங்குவது தான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்" என்றார்.