‘கர்நாடக காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க சிங்கப்பூரில் சதித் திட்டம்’ துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆவேசம்


டி.கே.சிவகுமார்

‘கர்நாடக மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கலைக்க சிங்கப்பூரில் கூடி சதித் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்’ என்று மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான டி.கே.சிவகுமார் ஆவேசம் காட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அங்கே ஆட்சியமைத்துள்ளது. ஆட்சியை இழந்த பாஜகவும், தேர்தலில் படுதோல்வி கண்ட மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் தற்போது நெருங்கி வருகின்றன. அண்மையில், பாஜக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையை சந்தித்து, மதசார்பற்ற ஜனதாதளத்தின் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி ஆலோசனை நடத்தினார்.

மேலும், சட்டப்பேரவை கூட்டங்களின்போதும் இந்த இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. அவையில் ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, பாஜகவின் 10 எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக - ஜனதா தளம்(ம) எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக அவையை புறக்கணித்தனர்.

இவற்றுக்கு அப்பால் குமாரசாமியின் சிங்கப்பூர் பயணம் குறித்தும், அங்கு அவர் மேற்கொண்ட அரசியல் சந்திப்புகள் குறித்தும் ஊடகங்களில் புலனாய்வு கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. இவற்றை மேற்கோள் காட்டியே, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் சீற்றம் காட்டியிருக்கிறார். குமாரசாமியின் பெயரைக் குறிப்பிடாது, “கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க சிங்கப்பூரில் கூடி சதித்திட்டம் தீட்டி இருக்கிறார்கள். பெங்களூரு திட்டங்கள் போதாதென்று சிங்கப்பூரிலும் கூடிப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் காங்கிரஸ் அரசு கவலைப்படாது” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இதனையொட்டி, பாஜகவின் ‘ஆபரேஷன் தாமரை’ அதிரடி நடவடிக்கைகள் ,அதற்குள் கர்நாடகத்தில் ஆரம்பித்துவிட்டதா என்ற அரசியல் ஐயங்கள் அங்கே மையமிட்டுள்ளன.

x