நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக நாடாளுமன்ற குழு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மஹுவா மொய்த்ராவுக்கு புதிய பதவியை வழங்கி அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடியா வடக்கு தொகுதியின் மக்களவை தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருபவர் மஹுவா மொய்த்ரா. சமீபத்தில் நாடாளுமன்ற நன்னடத்தை விதிகளுக்கு மாறாக மொய்த்ரா செயல்பட்டதாக புகார் எழுந்தது.
நாடாளுமன்ற பயன்பாட்டுக்காக, அவருக்கு வழங்கப்பட்ட இணையதளத்தை தொழிலதிபர் ஒருவருக்கு வழங்கி முறைகேடாக செயல்பட்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக நாடாளுமன்ற நன்னடத்தை குழு விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணையில் ஆஜரான மஹூவா மொய்த்ரா, மிக மோசமான கேள்விகளை எழுப்பியதாக குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த விவகாரத்தில் மொத்ராவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு அவரே உரிய விளக்கத்தை அளித்து அதில் இருந்து வெளியே வருவார் எனவும் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவரை எம்.பி., பதவியில் இருந்து நீக்குவது என நன்னடத்தை குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த சூழலில் மஹுவா மொய்த்ராவுக்கு புதிதாக கட்சியில் பதவி வழங்கி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மஹுவா மொய்த்ராவின் தொகுதி உள்ள கிருஷ்ணாநகர் மாவட்டத்தின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக அவரை நியமித்து தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...