தமிழ் வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


சென்னை: தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவி இதுவரை பதவிஉயர்வு மூலமாக மட்டுமே நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளது.

அந்த வகையில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவியில் 13 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்குரிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி - முஸ்லிம், எம்பிசி, எஸ்சி,எஸ்டி) 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது.

26 வகை பணிகள்: மொத்தம் 3 பகுதிகளைக் கொண்ட இந்த தேர்வில் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வு நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது. தமிழ்மொழித் தாள் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முகத் தேர்வு உள்ளவை) தமிழ் வளர்ச்சிஉதவி இயக்குநர் தேர்வு மட்டுமின்றி அரசு கலைக் கல்லூரி நூலகர், அரசு சட்டக்கல்லூரி நூலகர், கால்நடை மருத்துவர், கணக்கு அலுவலர், உதவி மேலாளர் உட்பட 26 வகையான பணிகளுக்கான தேர்வுகளும் இடம்பெற்றுள்ளன.

ஆன்லைனில் விண்ணப்ப பதிவு: இத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்.28-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையம், வெவ்வேறு தேர்வுகளுக்கான பதவிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநராகப் பணியில் சேருவோர் துணை இயக்குநர், இயக்குநர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

x