``சாதித்துக் கொண்டிருந்த தென்தமிழகம் தற்போது சாதி பிரச்சினையினால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது மிக கவலை அளிக்கக் கூடியதாக உள்ளது'' என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த தமிழிசை, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ’’தமிழக அரசிடமிருந்து தீபாவளி வாழ்த்து கிடைக்காது. அதனால் முதலாவதாக சகோதரியாக தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தென்பகுதிக்கு வருவதில் தாய் வீட்டிற்கு வருவது போல் மகிழ்ச்சியாக உள்ளது. சாதனை படைத்துக் கொண்டிருக்கின்ற தென்தமிழகம் தற்போது சாதி பிரச்சினையினால் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பது மிக கவலை அளிக்கக் கூடியது.
ஏனென்றால் தச்சநல்லூரில் இரண்டு இளைஞர்களை சாதியத்தை சுட்டி காண்பித்து சிறுநீர் கழிக்கப்பட்டது மிக வேதனையாக இருக்கிறது. தமிழகத்தில் சாதிய வன்முறைகள் அதிகரித்து இருக்கிறதை தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து, நாங்குநேரி நிகழ்வு, வேங்கை வயலில் குடிநீரில் மலம் கழிப்பு, மனிதர் மீது சிறுநீர் கழிப்பது ஆகியவை கவலை அடிக்கக்கூடியது அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் நீட் தான் தலையாய பிரச்சினை மாதிரி. அதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் நீட் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள் அது பிரச்சினை என்றால் சட்டரீதியாக அணுகுங்கள். எல்லாத்தையும் விட்டு விட்டு இதுதான் பிரச்சினை என்று அதை பின்தொடர்ந்து வருகிறார்கள். இது தவறு.
உதயநிதி சனாதனம் பற்றி பேசியது குறித்து மன்னிப்பே கேட்க மாட்டேன். நான் சொன்னது சொன்னதுதான் என்று கூறுகிறார். மன்னிப்பு கேட்க வேண்டியது நிறைய இருக்கிறது'' என்றார்.
பீகார் முதல்வர் பெண்களைப் பற்றி அவதூறாக பேசியது குறித்து பேசுகையில், முதலமைச்சர் நிதிஷ்குமார் பேச்சு மிக மிக கண்டிக்கத்தக்கது. மேற்கு வங்கத்தில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பணம் வாங்கிக்கொண்டு கேள்வி கேட்கிறார்கள் என்ற செய்தி, எதிரில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒவ்வொன்றாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டம்'' என்றார் தமிழிசை.